வெள்ளித்திரையில் பல நெருக்கடிக்கடிகளைச் சந்தித்ததால் அங்கிருந்து தப்பி ஓடி வந்து சின்னத்திரைக்கு ‘குயீன்’என்ற வெப் சீரிஸை இயக்கி வந்த கவுதம் மேனனுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் தொடரை தங்கள் அனுமதியில்லாமல் அவர் இயக்கி வெளியிடமுடியாது என்று ஜெ’வின் அண்ணன் மகன் தீபக் பேட்டியளித்துள்ளார்.
ஜெ’வின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை ‘குயீன்’என்ற பெயரில் கவுதம் மேனன் இயக்கியிருக்கும் வெப் சீரிஸ் முடிவடைந்து மிக விரைவில் பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். அவரை அச்சு அசலாக ஜெ’பாத்திரத்துக்கு மாற்றியிருந்த ‘குயீன்’படத்தின் முதல் பார்வை இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி வலைதளங்களில் வைரலாகியிருந்தது. அதைக் கண்டு கொதித்தெழுந்த முன்னாள் முதல்வரின் அண்ணன் மகள் தீபா எங்கள் அனுமதி இல்லாமல் அந்தத் தொடர் எப்படி வெளியாகிறது என்று பார்ப்போம் என்று சவால் விட்டிருந்தார்.
தீபாவைத் தொடர்ந்து இன்று இது தொடர்பாக கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில்,பத்திரிகைகளின் மூலம் கௌதம் வாசுதேவ் மேனன் ’குயீன்’ என்ற தலைப்பில் வெப் சீரிஸ் எடுக்க உள்ளார் எனத் தெரிந்து கொண்டேன். அத்துடன் அந்தப் படம் ஒரு அரசியல்வாதியின் சுயசரிதை என்று அவர் அறிவித்துள்ளார். எனினும் அது யாருடையது என்று அவர் இன்னும் தெரிவிக்கவில்லை. ஏற்கெனவே ஏ.எல்.விஜய் எடுக்கும் ’தலைவி’ என்ற படம் ஜெயலலிதா அவர்களின் கதை என்பதால், விஜய் எங்களிடம் கதை கூறி அனுமதி பெற்றார். ஆனால் கவுதம் மேனன் அப்படி எங்களிடம் இதுவரை அனுமதி பெறவில்லை.
எனவே பத்திரிகை மூலம் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். யாராவது எங்களது குடும்பத்தின் அனுமதி இன்றி ஜெயலலிதா குறித்து படம் எடுக்க முற்பட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியலான தீவிர நடவடிக்கை பாயும். ஆகவே இயக்குநர் கௌதம் மேனன்’குயின்’ என்ற வெப் சீரிஸ் எந்த அரசியல்வாதியின் சுயசரிதை என்பதை விரைவில் தெளிவுப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளித்திரையில் கவுதம் மேனன் இயக்கி முடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’,’எனை நோக்கிப் பாயும் தோட்டா’ஆகிய இரு படங்களும் ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக நீண்ட காலமாகக் கிடப்பில் இருக்க சின்னத்திரை சீரியலிலும் சிக்கலை எதிர்கொண்டுள்ளார் கவுதம்.