ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி (52), தன் மகளின் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வந்தார். கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி பரோலில் வந்த அவர், சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். நளினியின் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், பரோல் காலத்தை ஒரு மாதம் நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து கோர்ட் மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது.
இந்நிலையில், தனது பரோலை அக்டோபர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில், இலங்கையில் இருக்கும் தனது மாமியாருக்கு விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் அவர் உடனடியாக வர இயலவில்லை. அவர் இம்மாத இறுதியில் இந்தியா வருவார் என்று கூறியிருந்தார். நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்கா ராமன் அமர்வில் இந்த மனு இன்று விசாரணை வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் பரோலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பரோலை நீட்டிக்க மறுத்து விட்டனர். இதையடுத்து நளினி தரப்பு வக்கீல் ராதாகிருஷ்ணன் 2 வாரமாவது நீட்டிக்க வலியுறுத்தினார். இதையும் கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் ஒரு வாரமாவது நீட்டிக்க கோரியும் கோர்ட் ஏற்கவில்லை. இதையடுத்து வரும் 15 ஆம் தேதி நளினி மீண்டும் சிறைக்கு செல்கிறார்.