தங்கத்தின் தேவைக்கு இந்தியா இறக்குமதியையே முழுமையாக நம்பியிருக்கிறது இதனால் டாலரின் மதிப்பு உயரும்போது எல்லாம், தங்கத்தின் விலையும் அதிகரிக்கிறது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி மட்டும் ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1, 113 அதிகரித்தது. அன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 650 அதிகரித்தது.
இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டு இறுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 40 ஆயிரத்தை தொடும் அபாயம் உள்ளது. தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சர்வதேச அம்சங்களும் சேர்ந்து தங்கத்தின் விலையை பாதிக்கின்றன. சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி 10-%ல் இருந்து 12.5 %ஆக அதிகரிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் 35 அடிப்படை புள்ளிகள் குறைத்திருப்பது தங்கத்தின் விலைக்கு தடங்கலாகியுள்ளது.
“ரெப்போ வட்டி விகிதம் என்றால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கப்படும் தொகைக்கு வங்கிகள் கொடுக்கக் கூடிய வட்டி விகிதம்தான். இந்த வட்டியை குறைப்பது என்பது ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் அதிக பணம் கடன் வாங்கும் திறனை உருவாக்கும்.”
இதனால் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தங்களிடம் அதிக பணம் இருப்பதால், வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்கும். நிதிப் புழக்கம் பொதுவாக அதிகரிக்கும். இதனால், நிறுவனங்களும், மக்களும் இந்தப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வர். இதனால் தங்கத்திற்காக தேவை அதிகரிக்கும். விளைவு, தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் என்கின்றன தொழில்துறை வட்டாரங்கள்.
அதேபோல் பல்வேறு நாடுகளிலுள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்க தொடங்கி விட்டன. இதனால், தங்கத்திற்கு தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு இணையாக சீனாவும் அதிக தங்கத்தை வாங்கி வருகிறது. இதுவும் தங்க விலை உயர்வுக்கு காரணமாகும்.
தற்போதைய நிலையில் தங்கத்தை வாங்குவதைவிட தேவையின் அடிப்படையில் வாங்க முடிவெடுப்பது நல்லது. தங்கத்தை வாங்க தொடங்கினால், அதன் விலை மேலும் அதிகரிக்க தொடங்கும் .