சூர்யா,கே.வி.ஆனந்த் கூட்டணியின் ‘காப்பான்’படம் திருட்டுக்கதை குற்றச்சாட்டிலிருந்து சட்ட ரீதியாக இன்று தப்பியது. ‘காப்பான்’கதை திருடப்பட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் படத் தயாரிப்பாளர்,இயக்குநர்,கதாசிரியருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.
இன்னும் ஒரு வாரத்தில் செப்டெம்பர் 20 தேதி வெள்ளியன்று ரிலீஸாகவிருக்கும் ‘காப்பான்’படத்தின் கதை தன்னுடையது என்றும், ’சரவெடி’என்ற தலைப்பில் தான் எழுதி வைத்திருந்த கதையை கே.வி.ஆனந்த் ‘காப்பான்’என்ற பெயரில் மாற்றி எடுத்திருப்பதாகவும் கடந்த மாதம் குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். ஒன்றிரண்டு வாய்தாக்களுக்குப் பிறகு இன்று இறுதி விசாரணை நடந்த நிலையில் ‘காப்பான்’ ஜான் சார்லஸ் என்பவரிடமிருந்து திருடப்பட்ட கதை என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதை ஒட்டி தனது படத்தின் கதாசிரியரான பட்டுக்கோட்டை பிரபாகருடன் அவசர பத்திரிகையாளர் சந்திப்பு இயக்குநர் கே.வி.ஆனந்த் அழைப்பு விடுத்திருந்தார். அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்கள் மத்தியில் ஆக்ரோஷமாகப் பேசிய பட்டுக்கோட்டை ,’காப்பான்’ கதை மட்டுமல்ல. 40 வருடமாக எழுதுகிறேன், ஒரு சிறுகதை காப்பி என்று சொல்லுங்கள் எழுதுவதையே நிறுத்திவிடுகிறேன்’என்று குறிப்பிட்டார்.