தல 60’படம் தொடர்பாக இன்னும் அதிகாரபூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜீத் அப்பாவுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்கவிருக்கும் இனிப்பான செய்தியை நடிகை அனிகா வெளியிட்டுள்ளார். அவருக்கு அஜீத் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
அனிகா சுரேந்திரன் மிகச் சமீபத்தில்தான் ட்விட்டர் கணக்கு துவங்கினார். குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் ஜொலித்து வந்த அவர் தமிழில் முதல் முறையாக கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’படத்தில் அவர் மகளாக அறிமுகமானார். அடுத்து மீண்டும் அஜீத் மகளாகவே ‘விஸ்வாசம்’படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்தார். இப்படத்தில் அஜீத், நயன்தாராவுக்கு இணையாக அனிகாவும் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் சிலாகிக்கப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் அஜீத் ஹெச்.வினோத் இணையும் ‘தல60’படத்திலும் நீங்கள் நடிக்கிறீர்களாமே? என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து கேள்விகள் வந்தவண்ணம் இருந்தன. அவற்றிற்கெல்லாம் பொறுமையாக, ‘அப்படி நடந்தால் சந்தோஷம்தான்’என்று பதிலளித்து வந்த அவர் இன்று அப்படத்தில் தான் நடிக்கும் செய்தியை ஊர்ஜிதம் செய்திருக்கிறார். அது குறித்த பதிவில் ‘அப்பா அஜீத்தின் அடுத்த படமான ‘தல60’ல் மீண்டும் அவருடன் மூன்றாவது முறையாக இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி. பூம்ம்ம்ம்…என்று பதிவிட்டிருக்கிறார். அச்செய்திக்குக் கீழே அஜீத் ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர்.