கொடிய வாதங்களுக்கு, பஞ்ச சூத மெழுகு :
தீரும் நோய்கள் : பாரிசவாதம், முகவாதம், மூட்டுவாதம் போன்ற எல்லா வகையான வாத நோய்களும் தீரும்.
தேவையான பொருட்கள்
ரசம் ( சுத்தி ) 10 கிராம்
கெந்தகம் ( சுத்தி ) 10 கிராம்
வீரம் ( சுத்தி ) 10 கிராம்
பூரம் ( சுத்தி ) 10 கிராம்
மனோசிலை ( சுத்தி ) 10 கிராம்
சுக்குத் தூள் ( சுத்தி ) 150 கிராம்
செய்முறை :
1லிருந்து 5 வரையுள்ள பாஷாண சரக்குகளை, அதனதன் முறைப்படி தனித்தனியாகச் சுத்தி செய்து கொள்ளவும். சுக்கை மேல்தோல் சீவியெடுத்துக் கொள்ளவும். முதலில் ரசத்தையும், கெந்தகத்தையும் கல்வத்தில் போட்டு, இவை இரண்டும் நன்றாக உறவாகும்படி அரைக்கவும். கருத்திருக்கவும். அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக மற்ற மூன்றையும் போட்டு சுமார் 3 மணி நேரம் அரைத்துக் கொள்ளவும். ஒரு இரும்புக் கரண்டியை உள்பக்கம் துரு இல்லாமல் வெண்மையாக இருக்கும்படி சுத்தமாக நன்றாகத் தேய்த்துக் கொள்ளவும். முன் கல்வத்தில் அரைத்துள்ள பாஷாண மருந்துகளை கரண்டியில் போட்டு, கரி நெருப்பு அனலில் கரண்டியை வைத்து எரிக்க உருகி கட்டிப் போகும். இதையெடுத்து கல்வத்திலிட்டு அரைக்கவும். இத்துடன் சுக்குத்தூளையும் சேர்த்து, கொஞ்சங் கொஞ்சமாகத் தேன் விட்டு அரைத்துக் கொண்டு வர மெழுகாகும். இந்த மெழுகை வாயகன்ற புட்டியிலிட்டு மூடி, 40 நாட்கள் தானியபுடம் வைத்து எடுக்கவும். மருந்துகளின் அணுக்கள் ஒன்றோடு ஒன்று உறவாகி, மருந்தின் வீரியம் அதிகமாகும். வேகம் செய்யாது. சாந்தமாக வேலை செய்யும்.
உபயோகம் :
இந்த மெழுகில் இரண்டு மிளகளவு எடுத்து, பனைவெல்லத்திற்குள் வைத்து உருட்டி, வாயில் போட்டுக் கொண்டு பசுவின் பால் அருந்தவும். காலை மாலை 5 நாட்கள் சாப்பிட்டு, 5 நாட்கள் மறுபத்தியம் இருக்க மேற்சொன்ன நோய்கள் குணமாகும். மேலும், அவசியம் இருப்பின் 10, 15 நாட்கள் இடையில் விட்டு வைத்து, மறுபடியும் காலை மாலை 5 நாட்கள் சாப்பிடவும்.
பத்தியம் :
புளி, கடுகு, நல்லெண்ணெய், வாயு பதார்த்தங்கள், மாமிச மச்ச வகைகள் கூடாது. நெய், பால், தயிர், மோர் இவைகளையும் பொருத்தமான காய்கறிகளையும் சேர்க்கவும்.