விஸ்வாசம் ரிலீஸான பொங்கல் முடிந்து அடுத்த தீபாவளியைக்கொண்டாட மக்கள் தயாரான நிலையிலும் அப்படம் குறித்த சர்ச்சைகள் இன்னும் சூடாக நடந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் ஒரு பேட்டியில்’விஸ்வாசம் தமிழகம் முழுக்க வசூலித்தது 80கோடி ரூபாய்தான். ஆனால் அஜீத் ரசிகர்களைக் குஷிப்படுத்துவதற்காக 125 கோடி என்று பொய் சொன்னார்கள்’என்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான ‘விஸ்வாசம்’மாபெரும் ஹிட் என்று படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் படம் வெளியான சமயத்தில் தெரிவித்தது.அப்போது மொத்த வசூலான தொகை 125 கோடி என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அந்த ட்விட்டை வைரலாக்கி அஜீத் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்நிலையில் சமீபத்தைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் தமிழகம் முழுவதும் விஸ்வாசம் படத்துக்கு வசூலானத் தொகை வெறும் 80கோடிதான் என்றும், ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காகவே 125 கோடி ரூபாய் வசூல் என ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்கள் என்றும் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். திருப்பூர்க்காரரின் அந்தப்பேச்சு வலைதளங்களில் வைரலாகவே வழக்கம்போல் கிளர்ந்து எழுந்த விஜய் ரசிகர்கள் #ViswasamFakeBOExposed என்ற ஹேஷ்டேக்கை பரப்ப முயன்று வருகிறார்கள்.
இச்செய்தியைக் கண்டு கொஞ்சமும் கலங்காத கேஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது பொய்யில் உறுதியாக நின்று, எத்தனை தீபாவளி வந்தாலும் விஸ்வாசம் படத்தின் சாதனையை மறைத்துவிடவோ, மறந்துவிடவோ முடியாது என அடம்பிடித்து இன்னொரு ட்விட் வெளியிட்டுள்ளது.