தெலுங்கானா ஆளுநராக காலை பதவியேற்ற நிலையில், மாலையே 6 அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அமைச்சரவையில் தற்போது 12 பேர் உள்ள நிலையில், மேலும் 6 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு அதில் இணைந்துள்ள 6 புதிய அமைச்சர்களில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகன் கே.டி.ராமாராவும் ஒருவர். இதேபோல் மருமகன் ஹரீஷ் ராவுக்கும் அமைச்சர் பதவி அளித்துள்ளார் சந்திரசேகர் ராவ். ராஜ்பவனில் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
சந்திரசேகர் ராவ் மகன் கே.டி.ராமாராவ் பதவியேற்ற போது அவரது ஆதரவாளர்கள் எழுப்பிய வாழ்த்துக்கோஷமும், கைதட்டலும் ஆளுநர் தமிழிசையை வியப்படையச் செய்தது. ”கலவகுண்டல தாரக ராமாராவ் எனும் நான்” என்ற போது, டி.ஆர்.எஸ்.கட்சி தொண்டர்களின் கரவொலி சத்தம் விண்ணைப் பிளந்தது.
வெகுநேரமாகியும் கரவொலி சத்தம் குறையாததால் ஒரு கட்டத்தில் எழுந்துநின்று பதவிப்பிரமாண வாசகத்தை படிக்கத் தொடங்கினார் தமிழிசை. இதையடுத்து சந்திரசேகர் ராவ் தொண்டர்கள், நிர்வாகிகளை பார்த்து போதும் என சைகை காட்டியதை அடுத்து அமைதி திரும்பியது.
ஆளுநர் தமிழிசைக்கு அவர் ஐதரபாத் வந்த முதல்நாளே தனது மாஸை காட்டியுள்ளார் சந்திரசேகர் ராவ். இதனிடையே தெலுங்கானா அமைச்சரவையில் முதல்முறையாக 2 பெண்களுக்கும் வாய்ப்பு தந்துள்ளார் அவர். அதில் சபீதா ரெட்டி என்பவர் ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலமாக இருந்தபோது காங்கிரஸ் அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர்.