இஸ்ரோ தலைவர் சிவன் குறித்து அதிகம் தெரியாத சில தகவல்களை தற்போது காணலாம்.
இஸ்ரோவின் தலைவர் என்பதையும் கடந்து சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்துவதற்கு முன்னதாக வெளியுலகுக்கு அதிகம் தெரியாதவராகவே சிவன் இருந்தார்.
எந்த ஒரு உலக நாடும் செய்திராத ஒரு விஷயத்தை செய்து முடிக்கும் வகையில் சந்திரயான்-2 நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டது. எனினும் லேண்டர் விக்ரம் நிலவில் கால்பதிக்க 2.1 கிமீ தூரம் இருக்கும் போது தரை கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இந்தியாவின் கனவுத் திட்டத்தினை முழுமையடையாமல் போனதால் இஸ்ரோ மைய தலைவர் சிவன் கதறி அழுத போது அருகில் இருந்த பிரதமர் மோடி அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறி தேற்றினார். இவ்வாறாக இஸ்ரோ திட்டத்தின் மீது மிகவும் பற்றுடன் இருந்த விஞ்ஞானி சிவன் பற்றி அதிகம் தெரியாதவைகளை தற்போது தெரிந்து கொள்ளலாம்..
தமிழ்நாட்டைச் சேர்ந்த 62 வயதான ராக்கெட் விஞ்ஞானி சிவன், கடந்த 2018 ஜனவரி மாதம் இஸ்ரோவின் தலைவராக கிரண் குமாருக்கு பதிலாக நியமனம் செய்யப்பட்டார்.
கிரையோஜெனிக் எஞ்சின்கள் மேம்படுத்துதலில் சிவனின் பங்கு அளப்பரியது. முன்னதாக விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தரக்கண்விளை கிராமத்தைச் சேர்ந்த சிவன், உள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் படித்தவர். பின்னர் நாகர் கோவியில் உள்ள ST ஹிந்து கல்லூரியில் (Bsc maths) படித்து பட்டம் பெற்றுள்ளார்.
சிவனின் உறவினரான சண்முகவேல் கூறுகையில், குடும்பத்தின் முதல் பட்டதாரி சிவன் தான் அவர் ஒரு சுயம்புவாகவே வளர்ந்தார். இதுவரை பயிற்சி வகுப்புகளுக்கு (Tuition, Coaching Classes) அவர் சென்றதில்லை என்றார்.
மாணவர் பருவத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து தந்தையின் மாங்காய் தோட்டத்தில் பணியாற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தவர் சிவன். இவர் தோட்டத்தில் பணியாற்றும் போது தந்தைக்கு வேலையாட்களுக்கு கூலி மிச்சப்படுத்தப்படும் என்பதால் உற்சாகமாக பணிபுரிந்ததாக பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதே போல சென்னையில் MIT கல்லூரியில் படிக்க சேர்ந்த போது தான் முதல் முதலாக செருப்பு அணிந்ததாகவும் அதுவரை வெறும் காலுடனே நடந்திருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
1980களில் ஏரோனாடிக் பொறியியல் பட்டத்தை சென்னையில் உள்ள MIT கல்லூரியிலும், விண்வெளி பொறியியலில் முதுகலை பட்டத்தை பெங்களூருவில் உள்ள IISC கல்வி நிறுவனத்திலும், IIT பாம்பே கல்வி நிறுவனத்தில் டாக்டரேட் பட்டமும் பெற்றுள்ளார். இது தவிர சத்யபாமா பல்கலைக்கழகம் 2006ல் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கு கவுரவித்துள்ளது.
1982ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார் சிவன். PSLV உள்ளிட்ட பல திட்டங்களில் இவரின் பங்கு அளப்பரியதாக இருந்தது. பல திட்டங்களில் திட்டமிடுதல், வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் திட்டப் பகுப்பாய்வு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
தனது 30 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் திட்ட இயக்குனர் என்பதை கடந்து GSLV, PSLV, GSLV MkIII உள்ளிட்ட திட்டங்களில் அவர் பணிபுரிந்துள்ளார்.
விண்வெளி ஆராய்ச்சித்துறையில் சிவனின் சேவையை அங்கீகரித்து பல விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 1999ல் Shri Hari Om Ashram Prerit Dr Vikram Sarabhai ஆராய்ச்சு விருது, 2007ல் இஸ்ரோவின் மெச்சத்தகுந்தவர் விருது, 2011ல் Dr. Biren Roy Space Science விருது ஆகியவை குறிப்பிடத்தகுந்தவைகளுள் சில.
☛ National Academy of Engineering, Indian Systems Society for Science and Engineering, Aeronautical Society of India மற்றும் Systems Society of India ஆகிய அமைப்புகளில் சிவன் உறுப்பினராக உள்ளார்.
Integrated Design for Space Transportation System என்ற தலைப்பில் 2015ம் ஆண்டு புத்தகம் ஒன்றை சிவன் எழுதி வெளியிட்டுள்ளார்.
இஸ்ரோ தலைவர் பதவியுடன் சேர்த்து விண்வெளித்துறை மற்றும் விண்வெளி ஆணையத்தின் தலைவர் பொறுப்பையும் அவர் கவனித்து வருகிறார்.