நான் கடவுள் படத்துக்கு பிறகு ஆர்யாவுக்கு நடிப்பு தீனி போடும் அளவுக்கு எந்த கேரக்டரும் அமையவில்லை என்பது மகாமுனி பார்த்த பிறகுதான் தெரிந்தது. மனிதருக்குள் இவ்வளவு திறமையா?என்று.. இவ்வளவு நடிக்கத் தெரிந்த ஆர்யா இடையில் ஏன் சலிப்பூட்டும் கதைகளில் நடித்தார் என்று அவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
மகாமுனி, ஒரு படத்துக்கு கதைக்கரு எவ்வளவு முக்கியம் என்பது சாந்தகுமார் எடுத்துக்கொண்ட இடைவெளியே கூறும். ஒரு மனிதன் ஒரு கதைக்காக எட்டு வருடம் எடுத்துக் கொள்கிறார் என்றால் அதற்கான மதிப்பை எதிர்பார்க்கிறார் என்று அர்த்தமல்லவா…..
இந்த படத்தில் ஆர்யா மகா, முனி என்ற இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்பது சிறப்பாக இருக்கும். நானும் நல்ல நடிகன் தான் என்று தன் நடிப்பால் அவர் எடுத்துள்ளார். கேரக்டருக்கு ஏத்த உடலமைப்பு, பாவனை என அனைத்திலும் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட்டிருக்கிறார்.
மகாவுக்கு ஜோடியாக இந்துஜாவும், முனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் போட்டி போட்டு நடித்துள்ளனர். அனைத்து நடிகர் நடிகைகளும் சிறப்பான தேர்வு. இதுவே ஒரு கதைக்கு அடிப்படையாகும்.
கதைக்கரு என்னன்னு பாக்கலாம்.
ஆர்யா இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்து முனி, மகா என்று பெயரிடப்பட்டு பெற்றோரின் அரவணைப்பு இன்றி தனித்தனியே வளர்கின்றன. இதில் முனியை ரோகினி தத்தெடுத்து வளர்க்கிறார். இந்த முனி மிகவும் சாந்தமாகவும், படிக்கும் பிள்ளையாகவும் இருந்து வருகிறார். அவரின் மீது செல்வந்தரின் மகளான மகிமா நம்பியார் காதல் வயப்படுகிறார். இதற்கிடையில் முனி தாழ்த்தப்பட்டவர் என கருதி அவரை கொலை செய்ய திட்டம் போடுகின்றனர்.
அதேபோல் மகா, அரசியல்வாதி ஒருவரிடம் அடியாளாக வளர்ந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் கிட்டத்தட்ட கூலிப்படை தலைவரைப் போல் அரசியல்வாதிகளுக்கு வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் மகாவை கொள்ளவும் ஒரு சதித்திட்டம் நடக்கிறது.
இந்த இரு கதைகளையும் இணைக்கும் புள்ளியாக கிளைமாக்சில் கத்தி காயம்பட்ட மகா பிழைத்தாரா? முனியின் கதி என்ன ஆயிற்று? இவற்றை எல்லாம் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தனது திரைக்கதையால் மெய்சிலிர்க்க வைக்கிறார்,சாந்தகுமார்.
ஆர்யா வெகு ஆண்டுகளுக்கு பிறகு சிறந்த திரைக்கதையை தேர்வுசெய்து தனக்கான வழி இதுதான் இன்று அறிந்துள்ளது சிறப்பு. அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு கதையை தேர்வு செய்துள்ளார். தமனின் பின்னணி இசை கதையுடன் பயணித்து கதைக்கு உயிரூட்டி உள்ளது. கதாநாயகிகள் இருவரும் தங்களுக்கே உரிய சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். டைரக்டர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்துள்ளார். திரைக்கதையில் அவ்வளவு நேர்த்தி.
சரியான சஸ்பென்ஸ் திரில்லர்.! மறக்காம தியேட்டர்ல பாருங்க.