பிக் பாஸ் போட்டியில் முக்கிய போட்டியாளராக திகழ்ந்த மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால், அவர் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து, மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் போலீசில் புகார் ஒன்றை அளித்தது. அதில், மதுமிதா தனக்கு வர வேண்டிய பணத்தை உடனடியாக கேட்டு மிரட்டுவதாகவும், கொடுக்கவில்லை என்றால், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த புகார் குறித்து முதலில் பதில் அளிக்காத மதுமிதா, பிறகு பத்திரிகையாளர்களை அழைத்து, தன் மீது விஜய் டிவி பொய்யான புகார் அளித்திருக்கிறது. அவர்கள் தனக்கு தர வேண்டிய பணத்தை குறிப்பிட்ட தேதியில் தருவதாக சொன்னார்கள், அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன். பிறகு ஏன் என் மீது இப்படி பொய் புகார் கொடுத்தார்கள், என்று தெரியவில்லை என்று கூறியதோடு, இந்த விவகாரத்தில் கமல் சார் தலையிட்டு பிரச்சினையை தீர்க்க வேண்டும், என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் தன்னை கொடுமை படுத்தியதாக நசரத்பேட்டை காவல் நிலையத்தில் நடிகை மதுமிதா புகார் அளித்துள்ளார்.
தபால் மூலம் அவர் அளித்த புகாரில், சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அதை நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் கண்டிக்கவில்லை என்று தெரிவித்திருப்பதோடு, தன்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி 56 வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் மதுமிதா தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் போலீசார் நுழைந்து விசாரணை செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.