புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம், சிபிஐ காவலில் இருந்த போது, 90 மணி நேரத்தில் 450 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது.ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சிறை எண் 7ல், தனி அறை(வார்டு 9) ஒதுக்கப்பட்டது. மேலும் கோர்ட் உத்தரவுப்படி, மேற்கத்திய கழிப்பறை வசதி, படுக்கை,
மருந்துகள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், சிதம்பரம் சிபிஐ காவலில் இருந்த போது, அவரிடம் 90 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 நாள் சிபிஐ காவலில் இருந்த அவரிடம், 90 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், 450 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கேள்விகள் வெளிநாட்டு முதலீடு குறித்தும், வழக்கில் தொடர்புடையவர்களுடன், சிதம்பரத்தின் மகன் கார்த்தி அனுப்பிய மெயில் பரிமாற்றங்கள் குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் தொடர்புடைய 5 சாட்சிகளை வைத்து, குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.இவ்வழக்கில், செப்.,20ம் தேதி, சிபிஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
