பல் கூச்சம், ஏன் ? வருகிறது, தீர்வு என்ன ?
பல் கூச்சத்தை தவிர்ப்பது எப்படி ?
பல் கூச்சம் என்பது பெரிய பிரச்னையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்வின் இயல்பை முற்றிலுமாக பாதிக்கும். இயல்பாக பேச முடியாது. வாயில் காற்று நுழைந்தால் கூட அசௌகர்யம் ஏற்படும். இது போல சில சமயம் நடக்கும் பட்சத்தில் நம்முடைய மொத்த சிந்தனையும் பல்லை நோக்கி சென்றுவிடும். இப்படியே சில நாட்கள் ஓடினால் பல்லின் மீதான அக்கறை பயமாக மாறிவிடும். அதனால் பல் கூச்சத்தை தவிர்ப்பது மற்றும் அந்த பிரச்னை தீர்ப்பது குறித்து பார்ப்போம்.
பல காரணங்கள் உள்ளன. முக்கிய காரணம் பல்லின் எனாமல் தேய்வதுதான். சிலருக்கு பாதிப்பல் உடைந்திருக்கும் பட்சத்தில் கூச்சம் ஏற்படும். இதுதவிர சிலருக்கு பல்லின் வேர் தெரியத் தொடங்கும். அதாவது ஈறுகள் இறக்கம் அடைந்து பல்லின் வேர் தெரியும் போது பல் கூச்சம் ஏற்படலாம். ஒரு வேளை ஏற்கெனவே பல் சொத்தை ஏற்பட்டு, அந்த சொத்தையை சில அடைத்திருப்பார்கள். அந்த அடைப்பு உடைந்திருந்தால் கூட கூச்சம் ஏற்படலாம்.
சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை மற்றும் உணவுக்குழாய் (Gastroesophageal reflux disease) சம்பந்தப்பட்ட பிரச்னை இருக்கும். இதனால் அதிக அமில சுரப்பு காரணமாக பல் கூச்சம் ஏற்படலாம். அதிக அமிலம் சார்ந்த உணவுகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வதன் காரணமாக கூட பல்லின் கூச்சம் ஏற்படலாம்.
சிலர் பல் விளக்கும் முறை கடினமாக இருக்கும். அவர்கள் பயன்படுத்தும் பிரஷ் மற்றும் முறை காரணமாக பல்லில் தேய்மானம் ஏற்படலாம்.
மேலே சொன்ன காரணங்கள் எதுவுமே இல்லாமல் கூட சிலருக்கு பல் கூச்சம் இருக்கும். அவர்களுக்கு பல்லின் எனாமல் இயற்கையாகவே மிகவும் மெல்லியதாக இருக்கும். அதனால் கூட பல் கூச்சம் ஏற்படலாம். சிலர் தூங்கும் போது பல்லினை கடித்துக் கொண்டே தூங்குவார்கள். இதன் காரணமாகவும் பல் தேய்மானம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
என்ன செய்யலாம்?
Extra soft bristle பிரஷ்-யை பயன்படுத்தலாம். சிறிதளவு சுடு நீரில் உப்பு போட்டு கொப்பளிக்கலாம். ஆனால் நொடிகளுக்கு மேல் கொப்பளிக்க வேண்டாம். அதேபோல சுடு தண்ணீரில் தேன் கலந்தும் கொப்பளிக்கலாம். மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. மேலும் அதிக குளிர்ச்சி மற்றும் அதிக சூடான பானங்களை அருந்துவதை தவிர்க்கலாம். இவை அனைத்தும் தற்காலிகான தீர்வுகள்தான்.
சிலருக்கு பல்லில் மஞ்சள் கறை இருக்கும். இவற்றை நீக்க வேண்டும் ன்பதற்காக teeth whitening செய்வார்கள். இதனைச் செய்யும் போது பல்லின் எனாமல் தேயும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தேவையில்லாமல் teeth whitening செய்வதை தவிர்க்கலாம்.
*பல் கூச்சம் தொடங்கும் சமயத்தில், desensitizing toothpaste பயன்படுத்தலாம். புளூரைட் உள்ள மவுத்வாஷ் பயன்படுத்தலாம். தூங்கும்போது பல்லினை கடிப்பவர்களுக்கு என பிரத்யேக மவுத் கார்டு உள்ளது. அதனை தூங்கும்போது பயன்படுத்துவதன் மூலம் தேய்மானத்தை தடுக்கலாம்.
சிலருக்கு வாய் முழுவதும் பல் கூச்சம் இருக்கும். சிலருக்கு வாயின் ஏதாவது ஒரு பக்கத்தில் கூச்சம் இருக்கும். அதாவது எதாவது ஒரு பல்லில் கூச்சம் இருந்தால் கூட அந்த பக்கம் முழுவதும் அசௌகர்யம் இருக்கும். அதனால் மருத்துவரை ஆலோசிக்கும்பட்சத்தில் பிரச்னைக்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து அவற்றை முழுமையாக தீர்க்க முடியும்.