6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் லிஸ்ட் தயார்..விரைவில் அறிவிப்பு!
டெல்லி:
கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் பட்டியலை மத்திய அரசு தயார் செய்துவிட்டதாம்.
ராஜஸ்தான், கேரளா, கோவா, கர்நாடகா, ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் ஜம்மு, லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவெடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமித்ஷா பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு பட்டியலை தயார் செய்தாராம். அதில் ஜம்முவிற்கு மட்டும் பிரதமர் மோடியின் சாய்ஸ் எனக் கூறப்படுகிறது.
கேரளா ஆளுநராக இருக்கும் சதாசிவத்தின் பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டதால் அங்கு பினராயிக்கு குடைச்சல் கொடுக்கக்கூடிய, அரசியல் செய்யத்தெரிந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படலாம். இதுவரை அந்த மாநிலத்தில் ஆளுநராக இருந்த சதாசிவம் சொல்லிக்கொள்ளும் வகையில் கேரள அரசுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை.
இதேபோல் கர்நாடக ஆளுநராக உள்ள வஜூபாய் வாலாவின் பதவிக்காலமும் முடிவடைந்து விட்டது. கர்நாடகாவில் நூலிழையில் பாஜக ஆட்சி நடப்பதால், அங்கு அரசியல் பதற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் அங்கு நாக்பூர் பரிந்துரைக்கும் நபர் ஆளுநராக வர வாய்ப்புள்ளதாம்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அம்மாநில அரசுக்கு சிம்ம சொப்பணமாக திகழக்கூடிய வகையில் அங்கும் ஆர்.எஸ்.எஸ். முகாமில் இருந்து ஒருவர் ஆளுநர் ஆகக் கூடும் எனக் கூறப்படுகிறது.
ஜம்முவை பொறுத்தவரை பிரதமரின் முதன்மை செயலாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ள நிர்பேந்திர மிஸ்ராவை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் எண்ண் ஓட்டத்தை அறிந்து செயல்படக் கூடியவர் மிஸ்ரா என டெல்லி செய்தியாளர்கள் வர்ணிக்கின்றனர்.