சென்னை:
தங்க தமிழ்செல்வனுக்கு ஏன் மாவட்ட செயலாளர் பதவி தரவில்லை என்பதுதான் தற்போதைய கேள்வியாக எழுந்து உள்ளது.
நம்பி வந்தவர்களை கைவிடுவதில்லை திமுக என்பது தற்போதைய அரசியலில் தெளிவாகி வருகிறது. கட்சியில் எத்தனை மூத்த தலைவர்கள் இருந்தாலும் சரி, எத்தனை புகைச்சல் இருந்தாலும் சரி, நம்பி வந்த யாராக இருப்பினும், அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தந்துள்ளது. குறிப்பாக அமமுகவில் இருந்து வந்தவர்களை வாரி அணைத்து கொண்டுள்ளது திமுக.
இதில் உச்சத்துக்கு போனவர் செந்தில் பாலாஜிதான். இவர் கட்சியில் சேர்ந்த நாளன்று அறிவாலயமே அமர்க்களப்பட்டது. எல்லா கட்சி தலைவர்களின் வயிற்றிலும் புளியை கரைத்தது. கட்சியில் இணைந்த வேகத்திலேயே மாவட்ட செயலாளர் என்ற பொறுப்பும் தரப்பட்டது. அதற்கு செந்தில்பாலாஜி 200 சதவீதம் பொருத்தமானவர்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
தங்க தமிழ்ச்செல்வனை இவ்வளவு அதீதமாக திமுக நம்பலாமா.. சாதகமாக இருக்குமா?
தேனி
அதேபோலத்தான் தங்க தமிழ்செல்வனும் மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். திமுகவில் இணைந்து 2 மாதமாகியும் எந்த பதவியும் அவருக்கு தரப்படாமலும் இருந்தது. இதை தவிர தேனியில் செல்வாக்கை அதிகரிப்பதும், தொகுதியில் பலமாக காலூன்றுவதும் திமுகவுக்கு இப்போதைய தேவையாக உள்ளது.
மாவட்ட செயலாளர்
இப்போதே தொகுதியை வலுப்படுத்தினால்தான், சட்டமன்ற தேர்தலில் பலத்தை நிரூபிக்க முடியும் என்பது கணக்கு. அதனால்தான் அதிமுகவின் கோட்டையாக உள்ள தேனியை, தங்க தமிழ்செல்வனின் ஆதரவை கொண்டு வலுவாக்க திமுக முயலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாவட்ட செயலாளர் என்பவரால்தான் இது சாத்தியமாகும். அந்த வகையில், தங்க தமிழ்செல்வன்தான் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் நம்பப்பட்டது. ஆனால் எல்லா யூகங்களும் தவிடுபொடியாகிவிட்டன.
ஓபிஎஸ் மகன்
கட்சியின் கொ.ப.செ. பதவி கிடைத்துள்ளது. இந்த பதவி மிக முக்கியமான பதவி. கவுரமிக்க பதவி. பொதுக்குழு, செயற்குழுவில் இந்த பதவியில் உள்ளோர் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். அவ்வளவுதான்.. ஆனால் மாவட்டத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது சந்தேகம்தான். ஏற்கனவே ஓபிஎஸ் மகனின் விஸ்வரூபத்துக்கு பிறகு, தங்க தமிழ்செல்வனின் செல்வாக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது.
விசுவாசம்
அப்படி இருக்கும்போது, மாவட்ட செயலாளர் பதவி இல்லாமல், கொபசெ பதவியை தந்தது ஏன்? செந்தில்பாலாஜியை விட தங்க தமிழ்செல்வனுக்கு மாவட்டத்தை கட்டி ஆளும் திறமை குறைவா? அல்லது இந்த கொபசெ பதவி கொடுத்து, பின்னாளில் தங்க தமிழ்செல்வனை பெரிய அளவுக்கு கொண்டு திமுக ஏதேனும் திட்டத்தில் உள்ளதா என்பதெல்லாம் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் திமுகவுக்கு தன் விசுவாசத்தை தங்க தமிழ்செல்வன் காட்டுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.