கவிழ்ந்து கிடக்கும் நிர்வாகிகள்… களையெடுக்கும் உதயநிதி.. கைவிரித்த ஸ்டாலின்..!
சென்னை:
தி.மு.க.வின் தலைவரான மு.க.ஸ்டாலின், தன் மகன் உதயநிதியை சமீபத்தில் கழக இளைஞரணியின் மாநில செயலாளராக நியமித்தார். பதவிக்கு வந்ததுமே மாநில செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம், அதுயிதுவென நடத்தி அதிர வைத்தார் உதயநிதி.
உடனே ‘புதிய நிர்வாகிகள் எப்பவுமே அப்படித்தான். வந்த ஜோருல கொஞ்சம் குதிப்பாங்க. அப்புறம் தூங்கிடுவாங்க.’ என்று கழக சீனியர்களும், இளைஞரணியில் பெஞ்ச் தேய்க்கும் நிர்வாகிகளும் நினைத்தனர்.
இந்த நிலையில், தமிழகம் முழுக்க தி.மு.க. இளைஞரணியிலுள்ள மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை அழைத்து கிண்டியில் ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுத்து அசத்தினார் உதயநிதி. அப்போது ‘உழைக்காத நிர்வாகிகள் மாற்றம், காலியாக கிடக்கும் பதவிகளுக்கு நியமனம் ஆகியன விரைவில் துவங்கும்.’ என்றார்.
அப்போதும் கூட ‘சரி எல்லாம் பேசுறதுதான், நடக்கணுமே?’ என்றனர் பெஞ்ச் தேய்க்கும் பேர்வழிகள். ஆனால் ‘நிர்வாகிகள் மாற்றம் விரைவில் நடக்கும்’ என்று சொன்னதை உடனேயே துவக்கிவிட்டார் உதயநிதி. ஆம், கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலுமே மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இளைஞரணி இருந்து வருகிறது.
பதறிய சிற்றரசர்கள்
மா.செ.க்களோ சிற்றரசர்களாக அதையும் சேர்த்து ஆண்டு வருகின்றனர். இளைஞரணி நிர்வாகிகளே நினைத்தாலும் இவர்களையெல்லாம் மீறி செயல்பட முடியலை, கட்சியை வளர்க்க முடியலை. இதனால், முதலில் மாவட்ட செயலாளர்களின் கட்டுக்குள் இருந்து இளைஞரணியை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். கழகத்தின் கட்டமைப்பின் படி, ஒவ்வொரு பகுதியிலும் திறன் மிக்க நபர்களை செயலாளர்களாக நியமிக்கும் புதிய லிஸ்டை தயாரித்துள்ளார்.
எலிமினேஷன் ரவுண்டு
அதேபோல், மாவட்ட செயலாளர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு, அவர்கள் காலடியிலேயே படுத்துக் கிடக்கும் இளைஞரணி நிர்வாகிகளையும் களையெடுக்க முடிவெடுத்துவிட்டார். அந்த வகையில் ‘எலிமினேட் செய்யப்பட வேண்டியவர்கள்’ எனும் லிஸ்ட்டும் தயார். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வர இருக்கிறது. அந்த வகையில் பல முக்கிய தலைகள் மாஜியாக்கப்பட இருக்கின்றனர், மாவட்ட செயலாளர்களின் ஏகாபத்திய அதிகாரத்துக்கும் இணையாக அவர்களின் மாவட்டங்களில் இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர்களும் வந்தமர போகின்றனர்.
வசூல் போய்ருமேய்யா
இதனால் தங்களின் வசூல், அதிகாரம் என எல்லாவற்றுக்கும் சிக்கல் வருமென்பதால், பதறிய அவர்கள் ஸ்டாலினிடம் சென்று ‘தலைவரே இது என்ன புதுசா இருக்கு நம்ம கட்சியில? இப்படி ஆளாளுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தால், எப்படி கட்சியை வளர்க்க முடியும். நீங்கதான் இந்த முடிவை நிறுத்தனும்.’ என்றார்களாம்.
கைவிரித்த ஸ்டாலின்
ஆனால் ஸ்டாலினோ “இளைஞரணியின் நிர்வாக முடிவுகளில் நான் தலையிடுறதில்லை.” என்று சிம்பிளாக கைவிரித்து விட்டாராம். இப்போது இளைஞரணியின் போட்டியாளர்களை எண்ணி, கடுப்பேறிக் கிடக்கின்றனர் சீனியர் தலைகள். ஆக செம்ம கச்சேரி இருக்குதுன்னு சொல்லுங்க!