சிக்ஸர் விமர்சனம்
வைபவிற்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. அவர் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் மட்டுமே இந்த ரகசியம் தெரியும். அவர் ஒரு முறை வெளியில் மாட்டிக்கொள்ளும்போது பீச்சில் நண்பனுக்காக காத்திருக்க, அங்கு நடக்கும் போராட்டத்திற்கு அவருக்கு தெரியாமலே அவர் தலைமை தாங்கிவிடுகிறார்.
இதனால் கவரப்பட்டு ஹீரோயின் அவரைக் காதலிக்கிறார். உண்மையை மறைத்து அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார் வைபவ். இன்னொருபுறம் அந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட எம் எல் ஏ அவரைக் கொல்லத் துடிக்கிறார். ஒவ்வொரு முறையும் தன் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் தாண்டி அவர் காதலில் ஜெயித்தாரா? எம் எல் ஏவிடம் இருந்து உயிர் தப்பினாரா என்பது தான் கதை.
காமெடி மட்டுமே வேறெதுவும் வேண்டாம் என்பதை முடிவு செய்து களத்தில் இறங்கியிருக்கிறார்கள். அதில் ஓரளவு ஜெயிக்கவும் செய்துள்ளார்கள். வைபவிற்கு இருக்கும் மாலைக்கண் நோய் தான் படத்தின் தீம். அதனால ஏற்படும் பிரச்சனைகள் தீவிரமாக இல்லாவிட்டாலும் காட்சிகளின் உருவாக்கத்திலும் டயலாக்குகளிலும் நம்மை ஈர்க்கிறார்கள்.
இதுவரை பன்மடங்கு பார்த்த காட்சிகள் தான் இப்படத்திலும் வந்திருக்கிறது. ஆனால் நம்மை சரியான இடத்தில் சிரிக்க வைத்ததில் வெற்றி பெற்றுள்ளனர் படக்குழுவினர். ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் ஒரு எதிர்பாரா திருப்பம் வந்து நம்மை சிரிப்பு மூட்டுவதில் ஜெயித்திருக்கிறது. அது தான் இந்தப்படத்தின் பெரிய பலமும் கூட.
அதே போல் ஹீரோ மட்டுமல்லாது மற்ற கேரக்டர்களும் அழகாக எழுதப்பட்டு திரையிலும் அவர்களுக்கு சரியான பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக இளவரசு, ராதாரவியை பல இடங்களில் தனித்து ரசிக்க முடிகிறது. ராதாரவியின் அந்த குடிகார காமெடி எதிர்பாராத இன்ப அதிர்ச்சி.
வைபவ் மேயாத மான் படத்திற்கு பிறகு இதில் அதே பாணியில் வேறு ஒரு நடிப்பை தந்திருக்கிறார். மனிதரின் டைமிங் காமெடி, ரியாக்சன்கள் பல இடங்களில் வயிற்றை பதம் பார்க்கிறது. அவருக்கு கண் தெரியாது என்பதை நாம் உணரும்படி செய்திருக்கிறார். அதிலேயே அவர் வெற்றிபெற்றுவிட்டார்.