லண்டன்:
தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளை துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, முன்னிலையில் கிங்ஸ் மருத்துவமனை கிளை தமிழகத்தில் துவங்க ஒப்பந்தம் போன்றவை கையெழுத்தாகியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்டமாக லண்டன் சென்றடைந்தார். அங்கு லண்டன் வாழ் தமிழர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். லண்டனில் வருகிற 1ம் தேதி வரை தங்கி இருந்து, அங்குள்ள சில மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகள் குறித்து நேரில் பார்வையிடுகிறார்.
அங்கிருந்து 2ம் தேதி அமெரிக்க செல்கிறார். இரண்டு வாரம் வெளிநாடு பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 10ம் தேதி சென்னை திரும்புகிறார். லண்டன் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் லண்டன் நேரப்படி காலை 9 மணியளவில் சுகாதாரத்துறை தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கொசுக்களால் பரவும் தொற்று நோய்களை முழுமையாக கட்டுப்படுத்துவது, மருத்துவர் மற்றும் செவிலியர் பணி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் கையெழுத்தாகின.
இந்நிலையில் தற்போது லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவ முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதேபோல லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன், டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தாகியுள்ளன. டெங்கு, மலேரியா நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துதல் & அந்நோய்களை கையாளும் முறைகள் தொடர்பாக நோக்க அறிக்கை லண்டனில் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.