தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாகின்றன. இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. பா.ஜனதாவின் மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து பட தயாரிப்பாளர் ஷிவ ஷர்மா கூறும்போது, “வாஜ்பாய் வாழ்க்கையை படமாக எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” என்றார். படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணி நடக்கிறது. வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு நடக்கிறது. படத்துக்கு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.