தமிழகத்தில் பால் விலை உயர்வு காரணமாக பரவலான மழை மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பால் திருவண்ணாமலை அருகில் உள்ள தல்லாகுளம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. தல்லாகுளம் சந்தை வாரந்தோறும் ஞாயிறுமட்டும் சந்தை நடைபெறும். இதில் வளர்ப்பு மாடுகளும், கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படும். இந்த சந்தைக்கு திருவண்ணாமலை மற்றும் மாவட்டத்தின் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
மாடுகளை வாங்க தமிழகம் மற்றும் புதுச்சேரி,கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கோவா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வர். இந்த நிலையில், தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் பரவலான மழை, பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறப்பினால் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்கும் முடிவினை கைவிட்டுள்ளனர். இதன் காரணமாகதல்லாகுளம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து இன்று கூடிய மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மாடுகளை வாங்க வந்த வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து தல்லாகுளம் சந்தை வியாபாரி கார்த்திக் ராமசாமி கூறுகையில், வழக்கமாக ஆயிரத்திற்கு குறையாத மாடுகள் விற்பனைக்கு வரும். ஞாயிறு கூடிய சந்தையில் பசு, எருமை,ஆடு, கோழி,கன்று என 500 க்கும் மேற்பட்டவை விற்பனைக்கு வந்தது. வரத்து பாதியாக குறைந்தது. 10க்கும் மேற்பட்ட ஆடு,மாடுகளை வாங்கும் வியாபாரிகள் ஒன்றிரண்டு மாடுகளை மட்டுமே வாங்கி சென்றனர்.