சென்னை,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளில் சேர மத்திய தேர்வாணைய குழு முதல்நிலை தேர்வை அடுத்த ஆண்டு மே மாதம் 31-ந்தேதி நடத்த இருக்கிறது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற தமிழ்நாட்டை சேர்ந்த பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசு கட்டணம் ஏதுமின்றி 6 மாத கால உண்டு உறைவிட பயிற்சியை அளிக்கிறது.
இந்த பயிற்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் அளிக்கப்படும். ஆர்வமும், தகுதியும் உள்ள தமிழக இளைஞர்கள் இப்பயிற்சியினை பெற்று, வெற்றிபெற அன்போடு அழைக்கப்படுகிறார்கள். இந்த பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு அக்டோபர் 13-ந்தேதி தமிழகத்தில் 30 மையங்களில் நடைபெறும்.
இதற்கு இணையதள வழியாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந்தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் தகவல்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.