மாஸ்கோ,
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 27 ம் தேதி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மாஸ்கோவில் சந்தித்தார். இதனை தொடர்ந்து எஸ்-400 வான்வெளி பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் வாங்குவதற்கான முன்பணத்தை இந்திய அரசாங்கம் செலுத்தி விட்டதாக ரஷ்ய அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறநிலை காரணங்கள் கருதி இதன் தொழில்நுட்ப விவரங்களை வெளியிட முடியாது என ரஷ்யாவின் இராணுவ தொழில்நுட்பம் மற்றும் கூட்டாட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2020 இல் இருந்து 2025-க்குள் ஏவுகணைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு துறை இணை இயக்குனர் விலாடிமிர் ட்ராக்லாவ் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியா-ரஷ்யாவிற்கு இடையே நடைபெற்ற 19-வது வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டில் ரஷ்யாவிடம் ஐந்து எஸ்-400 ஏவுகணைகளை 5.43 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.