சென்னை,
நடிகர் சங்க தேர்தல் முடிந்ததை அடுத்து பாண்டவர் அணியின் நாசர், விஷால் கூட்டாக பேட்டி அளித்தனர் அதில் அவர்கள் கூறியதாவது:-
தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் சட்டரீதியாக நடைபெற்றுள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலில் 85% வாக்குகள் பதிவாகி உள்ளன.
நடிகர் சங்க தேர்தல் மிகவும் வெற்றிக்கரமாக நடந்து முடிந்துள்ளது. தடைகளை தாண்டி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது, ஏறக்குறைய 900 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட உள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த
நடிகர் கமல்ஹாசன்,
பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாம் என்றார். தபால் வாக்குப்படிவம் தாமதத்தால் ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்றும் அடுத்தமுறை இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். நண்பர் ரஜினி காந்தின் ஓட்டு எல்லா உறுப்பினர்களை போல மிக முக்கியமான ஓட்டு,அவர் வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்றார். வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் நாசர்:
சட்டப்படி தேர்தல் நடைபெற்று வருகிறது, கால தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டு விட்டது என்று நடிகர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். ரஜினிக்கு தபால் வாக்கு காலம் தாழ்ந்து சென்றதற்கு வருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நடிகர் விஜயகுமார்:
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்த்தாய் நடிகர் சங்கம் என்று மாற்ற நடிகர் விஜயகுமார் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தப்பின் பேட்டியளித்த நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
சைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா:
அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருந்தோம். தவறான புரிதலால் சில கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்தன. தேர்தல் நேரத்தில் நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறியது வேடிக்கையானது என நடிகர் ஆர்யா கூறியுள்ளார். நடிகர் சங்கத் தேர்தல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.
நடிகர் ஷியாம்:
நடிகர் சங்கம் என்பது ஒரு குடும்பம், தேர்தல் நேரத்தில் மட்டுமே இரு பிரிவு, தேர்தலுக்கு பிறகு ஒரு அணியாக செயல்படுவோம் நடிகர் ஷியாம் தெரிவித்துள்ளார். பாண்டவர் அணியினர் சில விவகாரங்களில் பொறுப்புணர்வு இன்றி உள்ளனர் என்றும் அது குறித்து கேள்வி கேட்டால் பதிலளிக்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நடிகை வெண்ணிறாடை நிர்மலா:
நல்லது செய்பவர்கள் ஜெயித்து வர வேண்டும், மூத்த கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.
நடிகர் பிரசாந்த்:
வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக உள்ளது, தேர்தல் அறிக்கையில் நல்ல திட்டங்களை சேர்த்துள்ளோம்.
நடிகை குஷ்பு:
பல தடைகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுகின்றது. உண்மை, நியாயம் வெல்லும். நடிகர் சங்க தேர்தலில் 80 சதவீத வாக்கு பதிவாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
நடிகர் மன்சூர் அலிகான்:
தபால் வாக்குகளை அளிக்க கூடுதல் கால அவகாசம் கொடுத்திருக்கலாம். தண்ணீர் பிரச்னையை மறைப்பதற்காக இதை பெரிதாக்குகிறார்கள். நீதிமன்றம் செல்லாமல் அவர்களுக்குள் பேசி இருக்கலாம்
கோவை சரளா:
பாண்டவர் அணி நிச்சயம் வெற்றி பெறும். தபால் ஓட்டுக்கள் தாமதமானதற்கு நாங்கள் காரணமல்ல.