இந்தியன் பீட்ரூட் பிரியாணி
தேவையான பொருட்கள்
எண்ணெய், நெய் – 1/2 கப், முந்திரி – 10, சோம்பு – 1/2 டீஸ்பூன், பிரியாணி இலை – 2, பட்டை – 1, மராட்டி முக்கு – 1, கல்பாசி – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 1, பச்சை மிளகாய் – 3, வெங்காயம் – 2, இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன், தக்காளி – 2, பச்சை பட்டாணி – 1/2 கப், பீட்ரூட் – 2 (துருவி வைத்துக்கொள்ளவும்), மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, புதினா – 1/4 கப், தயிர் – 1 கப், பிரியாணி மசாலா – 1½ டீஸ்பூன், பிரியாணி அரிசி – 2 கப்.
செய்முறை
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ளவும். பின் சோம்பு, பிரியாணி இலை, பட்டை, மராட்டி முக்கு, கல்பாசி, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பின் பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, பச்சை பட்டாணி, பீட்ரூட் சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் அளவுக்கு நன்றாக வதக்கவும். பின் மஞ்சள் தூள், உப்பு, புதினா, தயிர், பிரியாணி மசாலா சேர்த்து வதக்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் அரிசியை சேர்க்கவும். பின் மிதமான சூட்டில் 1 விசில் வரும் வரை வைத்து இறக்கினால் கமகமக்கும் சுவையான சத்தான பீட்ரூட் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி சேர்த்து பரிமாறலாம்.