சென்னை:
தமிழகம் முழுவதும் 63 பெட்ரோல் பங்குகள் எரிபொருள் விற்பனை செய்ய தொழிலாளர் துறை தடை விதித்துள்ளது. மாநில அளவில் 256 பங்குகளில் தொழிலாளர் துறை அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் மோசடி அம்பலமாகியுள்ளது. முன்னதாக, தொழிலாளர் ஆணையர் உத்தரவின் பேரில், கடந்த 19ம் தேதியன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள் தலைமையில் பெட்ரோல், டீசல் பங்க் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் பெட்ரோல், டீசல் சரியான அளவு ஊற்றப்படுகிறதா? என்றும், பெட்ரோல், டீசல் ஊற்றும் மிஷின்கள் சரியாக இயங்குகிறதா? என்றும் ஆய்வு செய்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 256 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 63 நிறுவனங்கள் அளவு குறைவாக வினியோகம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த பங்க் நிறுவனங்கள் விற்பனை செய்வதை தடைசெய்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, நுகர்வோர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் பம்புகளில் எரிபொருள் நிரப்பும்போது, பெட்ரோல், டீசல் நிரப்பும் அளவு காட்டி பூஜ்ஜியத்தில் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அளவு குறைவாக வினியோகிக்கும் பெட்ரோல், டீசல் நிறுவனங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க தொழிலாளர் துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் TNLMCTS என்ற செல்போன் செயலி மூலம் நுகர்வோர்கள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட 63 பெட்ரோல் பங்குகளும் எரிபொருள் விற்பனை செய்ய தடை விதித்து தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.