சென்னை:
மதத்தை பிரித்து அரசியல் லாபம் தேட நினைப்பவர்களுக்கு தமிழகத்தில் நிச்சயமாக இடமில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் பகுதி திமுக சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஏழை,எளிய இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா கொளத்தூர் பெரியார் நகரில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவுக்கு, திமுக தலைவரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இதில், 1400 பேருக்கு புத்தாடை, பிரியாணி செய்யும் பொருட்கள், 10 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, ஒரு மாணவிக்கு லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியா முழுவதும் நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தலில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதவெறி பிடித்தவர்களுக்கு மதத்தை வைத்து அரசியல் நடத்திட வேண்டும் என்ற உணர்வோடு, அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்ற அவர்களுக்கு, மதத்தைப் பிரித்து அதன் மூலம் அரசியல் லாபம் தேடலாம் என்று கருதி கொண்டிருப்பவர்களுக்கு, தமிழ்நாட்டில் நிச்சயமாக இடம் இல்லை என்பதை நம்முடைய மக்கள் நிரூபித்துக் காட்டி இருக்கின்றார்கள்.
அதிலே, குறிப்பாக இந்த கொளத்தூர் தொகுதியும் அடங்கி இருக்கின்றது என்பதை எண்ணிப் பார்க்கின்ற பொழுது எனக்கும் பெருமை. எனவே இங்குள்ள அத்துனை பேருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு எம்எல்ஏ, ரங்கநாதன் எம்எல்ஏ, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மாவட்ட துணை செயலாளர் தேவஜவகர், பகுதி செயலாளர்கள் நாகராசன், முரளிதரன் மற்றும் ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.