புதுடெல்லி:
தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களின் கடும் எதிர்ப்பை தொடரந்து மும்மொழி கொள்கை பிரச்சினையில் மத்திய அரசு பணிந்துள்ளது. தேசிய கல்வி கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மும்மொழி கொள்கையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. திருத்தப்பட்ட வரைவு அறிக்கை குறித்து ஜுன் 30-ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக
கஸ்தூரி ரங்கன் குழுவின் வரைவு அறிக்கையால் எழுந்துள்ள கொந்தளிப்பான சூழலை தணிக்கும் வகையில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் ட்விட்டர் பக்கங்களில் விளக்கம் அளித்தனர். இந்தி உட்பட எந்த ஒரு மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதி மொழிகளை வழங்கினர்.
இதனிடையே ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு வரைவு அறிக்கையை மக்கள் ஆய்ந்தறியாமல் தவறான முடிவுக்கு வர கூடாது என்று கேட்டுக் கொண்டார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை வழக்கம் போல் தமிழகம் தீவிரமாக முன்னெடுக்க, மேற்குவங்கம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் ஆதரவு கரங்கள் நீண்டன. இதனால் இந்தி திணிப்புக்கு எதிரான உணர்வு வீரியம் பெறுவதை உணர்ந்த மத்திய அரசு, மும்மொழி கொள்கையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.