பெல்லின்சோனா,
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் காரணமாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் நீடிக்கிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, அந்த நாட்டை அச்சுறுத்தும் வகையில் மத்திய கிழக்கு பகுதியில் தனது போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை குவித்து இருக்கிறது.
இந்த நிலையில், எந்த வித முன்நிபந்தனையும் இன்றி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக்பாம்பியோ கூறுகையில், “ஈரானுடன் அமர்ந்து பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்நாட்டுடன் எந்த வித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேவையானவற்றை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது” என்றார்.
அதே சமயம் ஈரானின் தவறான நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடும் செயலை அமெரிக்கா தொடரும் என மைக்பாம்பியோ கூறினார். ஆனால், அமெரிக்கா வார்த்தை ஜாலம் காட்டும் வகையில் பேசுவதாக ஈரான் கூறி, அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.