டெல்லி:
தொன்மையான தமிழை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும், இந்தியை கட்டாய பாடமாக்குதல் உள்ளிட்ட சில பரிந்துரைகளை, மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. இதனால், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக மத்திய அரசை சாடி வருகின்றன.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்படாது. கஸ்தூரி ரங்கன் குழு வரைவு அறிக்கையை மட்டுமே சமர்ப்பித்துள்ளது. இது கொள்கை முடிவு அல்ல. வரைவு அறிக்கையின் மீது பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்படும். வரைவு அறிக்கை கொள்கை முடிவாக அமல்படுத்தப்படும் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார். மேலும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘‘யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. இந்திய மொழிகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தற்போது வெளியாகியுள்ளது வரைவு அறிக்கை மட்டுமே. மக்களின் கருத்துகளை கேட்ட பிறகே முடிவு எடுக்கப்படும்’’ என்றார். இந்தியுடன் சேர்த்து மும்மொழி திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளனர்.
இதற்கிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” “#EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.