டெல்லி:
வேலை நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் 542 தொகுதிகளில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய கூட்டணி கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதில் பாஜ மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. இதன் காரணமாக நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமரானார். இதையடுத்து, கடந்த 30ம் தேதி பிரதமர் மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்றார். பிரதமருடன் 24 கேபினட் அமைச்சர்களும், தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். இதனை தொடர்ந்து, மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றுமுன்தினம் அறிவித்தார்.
பாஜக தலைவராக இருந்த அமித்ஷாவுக்கு மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர், மத்திய சட்டத்துறை அமைச்சராக ரவி ஷங்கர் பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இலாகா அறிவிப்புக்கு பிறகு மத்திய அமைச்சர்கள் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சரவையின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தேர்தலில் அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏழை விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கும் திட்டம், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சில்லரை வர்த்தகர்கள் 3 கோடி பேருக்கும், ராணுவ வீரர்களின் விதவை மனைவிகள், அவர்களின் பிள்ளைகளுக்கான படிப்பு உதவித் தொகையும் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், மத்திய அமைச்சர்கள் விடுமுறை எடுப்பதை தவிர்க்க வேண்டும், தங்களது பணிகளை விடாமுயற்சியுடன் சிறப்பாக செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு வரவேற்பு விழாக்கள் நடத்தப்படும். இதில் ஆடம்பரம் வேண்டாம். பகட்டான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்றார். அரசுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. ஒரு சிறிய தவறு கூட நடைபெறாமல் இருக்க மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பணியாற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.