மத்திய பிரதேச மாநிலத்தில் பப்ஜி என்ற பிரபல ஆன்லைன் கேமை தொடர்ந்து விளையாடிய சிறுவன், இதயம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள நீமூச் என்ற நகரத்தில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஐரிஸ் நாட்டை சேர்ந்த பிராடன் என்பவரால் உருவாக்கப்பட்டதே இந்த பப்ஜி ஸ்மார்ட் போன் கேம். Player Unknown’s Battle grounds என்பதே சுருக்கமாக பப்ஜி என அழைக்கப்பட்டு வருகிறது.
The boy who played Pubg for 6 hours continued At the end he die
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆன்லைன் விளையாட்டானது, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இதுவரை வெளிவந்த மொபைல் கேம்களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டடுள்ளதால் இந்த விளையாட்டிற்கு பலரும் அடிமைகளாகியுள்ளனர்.
பொதுமக்கள் மட்டுமல்லாமல் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் சிஆர்பிஎப் வீரர்கள் கூட இந்த விளையாட்டிற்கு அடிமையாகினர். இதனை கண்டறிந்த ராணுவம், அவர்களது போனில் இருந்த பப்ஜி கேமை டெலிட் செய்ய உத்தரவிட்டது. மேலும் அவர்களை கண்காணிக்கவும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பப்ஜி கேமால் வீரர்களின் செயல் திறன் பாதிக்கப்பட்டதாகவும், சரியாக தூங்காமலும் சக வீரர்களுடன் பேசாமலும் வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் உயரதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அனைத்து தரப்பினரையும் அடிமையாக்கி வைத்துள்ள பப்ஜியால் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்
நீமூச் நகரத்தை சேர்ந்த ஹாரூன் ரஷீத் குரேஷி என்பவரின் 16 வயது மகன் ஃபர்கான் குரேஷிக்கு, மொபைல் போனில் வீடியோ கேம்களை ஆடுவதில் ஆர்வம் அதிகம். கடந்த இரு நாட்களுக்கு முன் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக பப்ஜி வீடியோ கேமை, ஸ்மார்ட் போனில் விளையாடியுள்ளான்.
விளையாடிக் கொண்டிருந்த போதே திடீரென நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி விழுந்துள்ளான். இதனையடுத்து பதறிய உறவினர்கள் விரைவாக அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சிறுவன் ஃபர்கானின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக கண்ணீர் மல்க பேட்டியளித்த அச்சிறுவனின் சகோதரி, பப்ஜி வீடியோகேமை விளையாட வேண்டாம் என தனது அண்ணனிடம் பலமுறை தாம் எடுத்து கூறியதாக கதறினார். ஆனால் அவனோ எங்கள் யார் பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து பப்ஜி விளையாடுவதிலேயே குறிாக இருந்தான். யாரிடமும் சரியாக பேசாமல் பப்ஜியே கதி என இருந்ததாக வேதனை தெரிவித்தார். தற்போது அந்த விளையாட்டே தனது சகோதரனின் உயிரை பறித்துவிட்டதாக அவர் அழுதது பார்ப்பவரை கண் கலங்க செய்தது.
சிறுவர்களிடம் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுவதால் ஏற்படும் தீமைகளை, பெரியவர்கள் தான் எடுத்து கூற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் வீடியோ கேம்கள் விளையாடுவது குறித்த விழிப்புணர்வை, பள்ளிகள் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என சமூக ஆர்வலர்களும் கூறியுள்ளனர்.