வாஷிங்டன்:
இந்தியாவுக்கு அளித்த பயனடையும் வளர்ச்சியடையும் நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்க ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூன்- 5ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இனி வரி செலுத்தாமல் எந்த பொருளையும் அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய முடியாது. மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தெற்கு ஆசிய நாடுகளில் அதிகமாக இந்த ஜிஎஸ்பி வர்த்தகத் திட்டத்தில் இந்தியா பயன் அடைந்து வந்தது. ஆட்டமொபைல் உதிரி பாகங்கள், ஆடைகள், ஜவுளிப்பொருட்கள் என 2 ஆயிரம் பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்துவந்தது.
கடந்த 2017-ம் ஆண்டின் கணக்கின்படி, அதிகபட்சமாக இந்தியா 570 கோடி டாலர்(ரூ.40 ஆயிரம் கோடி) அளவுக்கு சலுகைகளை அனுபவித்துள்ளது. துருக்கிய 170 கோடி டாலர்கள் அளவுக்கு சலுகைகளை அனுபவித்தது. இந்த நிலையில், அமெரிக்க வர்த்தக சட்டம் 1974ல் திருத்தும் செய்து அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு 45 ஆண்டுகளாக அமெரிக்கா அளித்து வந்த சலுகை முடிவுக்கு வந்திருக்கிறது. இது குறித்து கடந்த மார்ச் மாதமே இந்தியாவுக்கு அமெரிக்க எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதற்கு ஏற்றபடி இந்திய சந்தை இல்லை என்று எச்சரிக்கை விடுத்தபோது அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை எந்தவித வரியும் இன்றி ஏற்றுமதி செய்து ஆசியாவிலேயே அதிக பயனடையும் நாடாக இந்தியா இருந்து வந்தது. அமெரிக்காவில் இருந்தும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் 20 அமரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டதை அடுத்து இந்தியாவை பயனடையும் வளர்ச்சி நாடு பட்டியலில் இருந்து நீக்க ட்ரம்ப் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்தியா மீது இந்த நடவடிக்கை வேண்டாம் என்று வலியுறுத்தி 24 அமெரிக்க எம்.பிக்கள் கடந்த 3ம் தேதி அதிபர் ட்ரம்ப்-க்கு கடிதம் அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.