ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ஆந்திர பிரதேச முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார்.
இதன்பின் நடந்த மதிய விருந்தில் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2வது முறையாக மோடி மீண்டும் பிரதமராகிறார். இதற்கான பதவியேற்பு விழா இன்று இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் மற்றும் ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் முடிவு செய்தனர். இதற்காக விஜயவாடா நகரில் இருந்து சிறப்பு விமானம் ஒன்றில் டெல்லிக்கு ஒன்றாக செல்வது என இருவரும் திட்டமிட்டனர்.
இதன்படி, மதியம் 2.30 மணியளவில் அவர்கள் புறப்பட்டனர். ஆனால், வெளிநாட்டு தலைவர்கள் வருகையையொட்டி டெல்லி விமான நிலையத்தில் 3.30 மணிக்கு பின் சிறப்பு விமானம் இறங்க அனுமதி வழங்க முடியாது என முதல் மந்திரி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் இரு முதல் மந்திரிகளின் விமான பயணம் ரத்து செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை தவற விட்டனர். சந்திரசேகர் ராவ் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நகருக்கு திரும்பி சென்றார்.