நேற்று இரவு, விஜயவாடாவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. நள்ளிரவில் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணமாக, ஜெகன்மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் மழை நீர் தேங்கியதோடு, விழா மேடை, பந்தல் மற்றும் சேர்களும் பலத்த சேதமடைந்தன. சேதம் அடைந்த பந்தல்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் மந்திரியாக பதவியேற்றதும் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்.
ஜெகன் மோகன் ரெட்டி, பதவியேற்கும் விழாவில், சந்திரபாபு நாயுடு பங்கேற்க போவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் குழு, ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் சந்திரபாபு நாயுடுவின் வாழ்த்து கடிதத்தையும் இக்குழு அவரிடம் வழங்க உள்ளது. முன்னதாக பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு, ஜெகன்மோகன் தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.