நிதி அமைச்சராகிறார் அமித்ஷா- பாஜக தலைவராகிறார் ஜே.பி. நட்டா?
டெல்லி:
மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமித்ஷா, நிதி அமைச்சராகிறார். இதையடுத்து பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்கிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு மோடி பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முன்னதாக அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ளோரை தமது இல்லத்துக்கு அழைத்து மோடி ஆலோசனை நடத்தினார். இன்று காலை முதலே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷாவும் பங்கேற்றார். இந்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அமித்ஷாவும் இடம்பெற உள்ளார். இதை பாஜகவினர் உறுதி செய்துள்ளனர்.
முந்தைய அரசில் நிதி அமைச்சராக இருந்த மூத்த பாஜக தலைவர் அருண்ஜேட்லி, தாம் மீண்டும் அமைச்சராக விரும்பவில்லை என கூறிவிட்டார். இதனையடுத்து அவரை சமாதானப்படுத்த பிரதமர் மோடி நேரடியாக சென்று சந்தித்தார்.
ஆனாலும் அருண்ஜேட்லி தமது நிலையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துவிட்டார். இதனால் அருண் ஜேட்லி வசம் இருந்த நிதித் துறை அமித்ஷாவிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.
இதனால் பாஜக தலைவர் பொறுப்பு ஜே.பி. நட்டாவுக்கு கிடைக்கும் என்கின்றன டெல்லி தகவல்கள். மோடி அமைச்சரவையில் அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட சீனியர்கள் இடம்பெறுகின்றனர்.
அதேபோல் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைக்க உள்ளது. அதிமுகவில் தற்போதுதான் அரசியலுக்கு வந்து லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற ரவீநதரநாத்குமாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கிறது.
அமைச்சர் பதவி விவகாரத்தை முன்வைத்து அதிமுகவில் இப்போதே சலசலப்பு தொடங்கியுள்ளது. இன்னும் இது அதிகரிக்கவே வாய்ப்பிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
மேலும் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் ராஜ்நாத்சிங்கே உளவுத்துறை வசம் வைத்திருப்பார் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.