டெல்லி:
காங்கிரஸ் எம்பி-க்கள் கூட்டம் டெல்லியில் ஜூன் 1 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தலைமையில் மக்களவை தேர்தலை சந்தித்த காங்கிரஸ், தொடர்ந்து 2வது முறையாக தோல்வியை சந்தித்தது. கடந்த 2014ல் 44 இடங்களில் மட்டுமே வென்ற இக்கட்சி, 2019 தேர்தலில் 52 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற மீண்டும் தவறியது. காந்தி குடும்பத்தினர் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த அமேதி தொகுதியில் ராகுல் காந்தியே தோல்வி அடைந்தார். மேலும், கடந்த 5 மாதத்திற்கு முன் ஆட்சியை பிடித்த ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை ராகுலால் ஜீரணிக்க முடியவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரசின் ஜார்கண்ட், அசாம், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஒடிசா மாநில தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்த தோல்வியால் கடும் அதிருப்தி அடைந்த ராகுல், கடந்த சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தனது குமுறல்களை கொட்டித் தீர்த்தார். மகன்களுக்கு சீட் கேட்டு சில மூத்த தலைவர்கள் தனக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், பிரசாரத்திலும் கட்சியை விட சொந்த நலனே முக்கியமாக கருதி செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதோடு, தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், அடுத்த தலைவர் காந்தி குடும்பத்தை சேராதவராக இருக்க வேண்டும் எனவும் ராகுல் கூறினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் கடும் குழப்பம் நிலவி வருகிறது. ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சோனியாவுக்கு நெருக்கமான மூத்த தலைவர் அகமது படேல், கே.சி.வேணுகோபால் ஆகியோர் ராகுலை சந்தித்து பேசினர். ஆனால், இது கட்சி நிர்வாகம் சம்மந்தப்பட்ட வழக்கமான சந்திப்பு என அத்தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். அதே போல, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராகுலை சந்திக்க நேற்று முன்தினம் நேரம் கேட்டிருந்தார். ஆனால், நேற்று முன்தினம் ராகுல் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். இந்நிலையில், காங்கிரஸ் எம்பி-க்கள் கூட்டம் டெல்லியில் ஜூன் 1 ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. மக்களவை காங்கிரஸ் எம்பி-க்கள் குழுவின் புதிய தலைவர் ஜூன் 1 ம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லியில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்த அனுமதி இல்லை. மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.