நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வறட்சியால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் காய்கறிகளின் இதனால் நடுத்தர மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு கோடை மழை பொய்த்ததால் நீர்நிலைகள் வறண்டன. கிணறுகளிலும் நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்றது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 9 அடியாக உள்ளது. ராமநதி அணை தண்ணீரின்றி வறண்டுவிட்டது. இதனால் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கியுள்ளது. மக்கள் குடிநீருக்காக திண்டாடுகின்றனர். தாமிரபரணியில் குறைந்தளவே தண்ணீர் ஓடுகிறது. அணைகளில் தண்ணீர் குறைந்ததாலும், ேகாடை மழை பெய்யாததாலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தை நம்பி பயிரிட்ட கத்தரி, தக்காளி உள்ளிட்டவைகளும் விளைச்சல் பாதித்தது. இதனால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளது.
தற்போது வைகாசி, ஆனி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கோவில் ெகாடை விழா அதிகளவில் நடைபெறும். விஷேச காலங்களில் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும். வறட்சி காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. நேற்று பாளையங்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ கேரட் ரூ.60க்கும், பீட்ரூட் ரூ.40க்கும், பீன்ஸ் ரூ.120க்கும், அவரைக்காய் ரூ.90க்கும், வெங்காயம் ரூ.50க்கும், மிளகாய் ரூ.65க்கும், கருணை கிழங்கு ரூ.65க்கும், பாகற்காய் பெரியது ரூ.55க்கும், சிறியது ரூ.80க்கும், தக்காளி ரூ.55க்கும், சேம்பு ரூ.60க்கும், கொத்தமல்லி ரூ.100க்கும், கறிவேப்பிலை ரூ.40க்கும், இஞ்சி ரூ.150க்கும், எலுமிச்சை ரூ.160க்கும் விற்பனையானது. காய்கறிகளின் விலை கடந்த சில மாதங்களை காட்டிலும் தற்போது உச்சத்திற்கு சென்றுள்ளது. இதில் ஆறுதலாக உருளை கிழங்கு ரூ.25க்கும், கத்தரிக்காய் ரூ.20க்கும், முருங்கைக்காய் ரூ.20க்கும், வெண்டைக்காய் ரூ.30க்கும், சவ்சவ் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகளின் விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுகுறித்து பாளை மார்க்கெட் காய்கறி கடை உரிமையாளர் தர்மராஜ் கூறுகையில்: மதுரை, திண்டுக்கல், பாவூர்சத்திரம், ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காய்கறிகள் வருகிறது. கடந்தாண்டு கோடை காலத்தை காட்டிலும் இந்தாண்டு காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அவற்றின் வரத்து குறைந்ததால் ஒரு சில காய்கறிகளை தவிர பெரும்பாலான காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. மேலும் போக்குவரத்து மற்றும் டோல்கேட்டுகளின் கட்டணம் அதிகரித்துள்ளதும் காரணங்களாகும் என்றார். பாளை கட்டிட கான்ட்ராக்ட் சூப்பர்வைசர் ஜெயராஜ் கூறுகையில்: நான் மாத சம்பளம் பெற்று வருகிறேன். வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்பு செலவு, பலசரக்கு, காய்கறிகள், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை செய்ய வேண்டியுள்ளது. தற்போது காய்கறிகளின் விலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளதால் குறைவான அளவில் காய்கறிகளை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதனால் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது என்றார்.
பாளை கேடிசி நகரைச் சேர்ந்த குடும்ப தலைவி செல்வி கூறுகையில்: எனது கணவர் சம்பளம் வாங்கி வந்தவுடன், வீட்டு வாடகை, காய்கறி, கல்வி செலவு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு செலவிற்கான பணத்தை மொத்தமாக என்னிடம் கொடுத்து விடுவார். அதனால் செலவுகளை யோசித்து செய்ய வேண்டியுள்ளது. கடந்தாண்டு கோடை காலத்தை விட தற்போது காய்கறிகளின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளதால் ஒரு கிலோ வாங்குவதற்கு பதிலாக அரை கிலோ வாங்க வேண்டியுள்ளது. வீட்டிலுள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊட்ட சத்துக்காக காய்கறிகள் வாங்க வேண்டியுள்ளது என்றார். பாளை சாந்திநகர் ஓய்வு பெற்ற புள்ளியியல் துறை அதிகாரி கணேசன் கூறுகையில்: காய்கறிகளின் விலைகள் கூடுதலாக உள்ளது. அதனால் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய காய்கறிகளை மட்டும் வாங்கி செல்ல வேண்டியுள்ளது. காய்கறிகளுக்கு என்று ஒரு பெரிய தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது.
இதனால் பிற செலவுகளை குறைக்க வேண்டியது உள்ளது. காய்கறி விலை உயர்வால் என்னை போன்ற ஓய்வு பெற்றவர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்றார். தற்போது ஏற்பட்டுள்ள காய்கறிகளின் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள், அன்றாடங்காய்ச்சிகள் மட்டுமின்றி தொழிலாளர்களின் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த விலையேற்றதால் விவசாயிகளுக்கு எந்த பலனுமில்லை. காரணம் தண்ணீர் இல்லாததால் சாகுபடி செய்த பயிர்கள் பெரும்பாலானவை காய்ந்து விடுகின்றன. கடன் வாங்கி சாகுபடி செய்தவர்கள், கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் விலை கொடுத்து வாங்குகின்றனர். விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.