டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணி பதவியேற்பு நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. தொடர்ந்து 2-வது முறையாக நரேந்திர மோடி மீண்டும் நாளை பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளை இரவு 7 மணி அளவில் பிரதமர் மோடி பதவியேற்கிறார். அப்போது, பிரதமராக மோடி பதவியேற்றவுடன், அவரது அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு;
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பை சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார். விழாவில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மற்றும் குலாம்நபி ஆசாத் பங்கேற்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக தலைவர்கள் பங்கேற்பு
மோடி பதவியேற்பு விழாவில் தமிழகத்தில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தில் பிரதான கூட்டணி கட்சி என்ற முறையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவியேற்பில் பங்கேற்கின்றனர். அதேபோல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜ ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.