6 கவுன்சிலர்களை துப்பாக்கி முனையில் அள்ளியது பாஜக.. திரிணாமுல் காங்கிரஸ் பகீர் ட்வீட்
கொல்கத்தா:
துப்பாக்கி முனையில் தங்களது கவுன்சிலர்களை பாஜக இணைத்து கொண்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தில், மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்களிப்பின் தொடர்ச்சியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்க பாஜக களம் இறங்கிவிட்டது.
இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தை சேர்ந்த, 51 கவுன்சிலர்கள் மற்றும் 3 எம்எல்ஏக்கள் நேற்று பாஜகவில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்தான் அதிகம் என்றும் செய்தி பரவியது.
உண்மை இது
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் செய்தி ஒன்று இதை மறுத்துள்ளது. தாங்கள் உண்மையை விசாரித்து பார்த்ததாகவும், அதில் தங்கள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு எம்எல்ஏ தான் பாஜகவில் இணைந்துள்ளார் என்றும், பிறர் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரட்டல்
துப்பாக்கி
தங்கள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பாஜக கட்சிக்கு தாவி உள்ளது மிகச் சொற்ப அளவில்தான் என்றும், 6 கவுன்சிலர்கள் மட்டுமே பாஜக சென்றுள்ளனர், அவர்களும் கூட துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்லப்பட்டு உள்ளனர் என்று பகீர் குற்றச் சாட்டை வைத்துள்ளது அந்த கட்சி.
நாடகம்
கிண்டல்
மேற்கு வங்கத்தில் பாஜக அபார வளர்ச்சி பெறுவதற்கு முக்கியமான காரணம் மம்தா பானர்ஜியின் வலது கரமாக செயல்பட்டு வந்த முகுல்ராய் ஆகும். 2017 ஆம் ஆண்டு அவர் பாஜகவில் இணைந்த பிறகு தான் அந்த கட்சியின் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளது. இதனிடையே தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மமதா பானர்ஜி தெரிவித்ததை, வெறும் நாடகம் இன்று முகுல்ராய் வர்ணித்துள்ளார்.
சட்டசபை தேர்தல்
2 வருடங்களில் தேர்தல்
மமதா பானர்ஜி தனது நாட்காலியை இறுக்கமாக பிடித்து வைத்துக் கொண்டுள்ளார். எந்த காரணத்திற்காகவும் அவர் ராஜினாமா செய்யமாட்டார் என்று முகுல்ராய் கிண்டல் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்துக்கு 2021ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 211 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் வென்றது. பாஜக வெறும் மூன்று தொகுதிகளை மட்டுமே வென்றது.
என்னதான் செய்வார்
மமதா என்ன செய்வார்
லோக்சபா தேர்தலில் பாஜக, பெற்றுள்ள வெற்றியை வைத்து, பார்க்கும்போது இன்னும் இரு ஆண்டுகளில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக பாஜக விஸ்வரூபம் எடுக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிலையில்தான் மேற்கு வங்கத்திலும் ஆப்பரேஷன் தாமரை அதிரடியை ஆரம்பித்துவிட்டது பாஜக. இதை மமதா பானர்ஜி வரும் நாட்களில் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதில்தான் மேற்கு வங்க அரசியலின் அடுத்த கட்ட நகர்வு இருக்கப்போகிறது.