லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் யார்.. பரபரக்கும் ஹேஷ்யங்கள்.. கேரளாவுக்கு வாய்ப்பு?
டெல்லி:
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி தென்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஒருவருக்கு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக படுதோல்வி அடைந்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 44 இடங்களில் வென்ற அக்கட்சி இம்முறை 52 இடங்களில் வென்றுள்ளது.
மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்றால் மொத்தமுள்ள உறுப்பினர்களில் 10% க்கும் குறையாத இடங்களை ஒரு கட்சி பெற வேண்டும். ஆனால் காங்கிரசுக்கு அதற்கு போதுமான எம்.பிக்கள் இல்லை. கடந்த தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இதே நிலைதான் இருந்தது. இருப்பினும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்று நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ராகுல் இந்த பதவியை ஏற்றுக் கொண்டால் அடுத்து வரும் பிரச்சார கூட்டங்களில் அவர் கலந்து கொள்வதற்கு சிரமம் ஏற்படும். நாடாளுமன்றம் நடைபெறும் காலங்களில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து அவைக்கு வர வேண்டும். இதனால் ராகுலுக்கு அடுத்த படியாக யார் என்பது குறித்த ஆலோசனையும் நடைபெற்றுள்ளது.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், கே.சி வேணுகோபால், ஜோதிராதித்யா சிந்தியா, சுஷ்மிதா தேவ், தீபேந்திரா ஹூடா ஆகியோரது பெயர்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில் கமல்நாத் மத்தியப் பிரதேச முதல்வர் ஆகிவிட்டார். சிலர் மக்களவை தேர்தலில் வெற்றி பெறவில்லை. இதனால் தென் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த பதவியை வழங்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களைப் பொறுத்த மட்டில் கேரளா மாநிலத்தில் இருந்து காங்கிரசுக்கு 15 எம்.பி.க்களும், தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து 9 எம்.பி.க்களும், உள்ளனர். இதில் கேரளா மாநிலத்தில் இருந்து சசி தரூர் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுரேஷ் கொடிகுன்னில் என்பவர் 7 வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் முரளிதரன் 4 முறை எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது மிக முக்கியமான பதவி. விவாதங்கள் வரும்போது பங்கேற்பது நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து நன்கு அனுபவம் இருக்க வேண்டும் என்பதால் இவர்கள் மூவரில் ஒருவருக்கு இந்த பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.