தே.மு.தி.க.வின் மாநில கட்சி அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க. போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. 2009 ஆம் ஆண்டில் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 10.1 ஆக இருந்தது. 2011ல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து சட்டசபையில் 29 இடங்களை பெற்றது. ஆனால் ஓட்டு சதவிகிதம் 7.9 ஆக குறைந்தது. 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட 14 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. வாக்கு சதவீதமும் 5.1 ஆக சரிந்தது. 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் 104 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்து ஓட்டு சதவீதமும் 2.39 ஆக சரிந்தது.
தற்போது போட்டியிட்ட 4 தொகுதியிலும் தோற்று, வாக்கு சதவீதமும் 2.19 ஆக குறைந்தது. மாநில கட்சிக்கான அங்கீகாரம் பெற மாநிலத்தில் பதிவான வாக்குகளில் 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும். ஒரு லோக்சபா தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும், அல்லது 6 சதவீத வாக்குகளையும் அல்லது 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒட்டு மொத்த சட்டசபை உறுப்பினர் இடங்களில் 3 சதவீத உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி ஆகும்.
ஆனால் தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டுகள் பெற்றுள்ள தே.மு.தி.க.வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை.