சமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கில் பெண் சாமியார் சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர் கைது
டெல்லி: சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கடந்த 2013 ம் ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட வழக்கில் பாஜகவின் பெண் சாமியாரும் தற்போதைய எம்.பி.யுமான சாத்வி பிரக்யாவின் வழக்கறிஞர் சஞ்சீவ் புனலேகர் என்பவரை சி.பி.ஐ கைது செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், புணே நகரை சேர்ந்த மருத்துவர் நரேந்திர தபோல்கர். சமூக ஆர்வலரான இவர், மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற மூடநம்பிக்கை எதிர்ப்பு இயக்கத்தை 1989-ல் நிறுவி, தொடர்ந்து நடத்தி வந்தார். தபோல்கர் அந்த இயக்கத்தின் மூலமாக பல போலி சாமியார்களை, பாபாக்களை, மந்திரவாதிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தினார்.
அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர் சமூகத்தை அறிவியல் மனப்பான்மையுடன் வளர்ப்பதில் அவரும் அவரது நிர்மூலன் சமிதி முன்னணியில் நின்றது. சிவசேனா, பிஜேபி போன்ற கட்சிகள் வீறு கொண்டு எழத் துவங்கிய 90-களில், மராட்டிய மாநிலத்திலேயே இந்து மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மிக கடுமையாக போராடி வந்தார். தெய்வங்களுக்கு காணிக்கை என்ற பெயரில் செல்வத்தை நாசமாக்குவது மற்றும் தெய்வங்களை நீரில் கரைத்து பொதுப் பயன்பாட்டிற்கான தண்ணீரை மாசுபடுத்துவது போன்றவற்றுக்கு எதிராகவும் பல இயக்கங்களை முன்னின்று நடத்தியுள்ளார்.
நாசிக் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் ஆதிக்க சாதி பஞ்சாயத்துக்களின் அநியாய தீர்ப்புகளையும், அவர்கள் நடத்தும் கௌரவக் கொலைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தார். இதனால் பலரைது கோபத்துக்கும் ஆளான தபோல்கர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி சென்றபோது, ஓங்காரேஸ்வரர் பாலம் அருகில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து புனே சிட்டி போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் 2014 மே மாதத்தில் வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த சிபிஐ சனாதன் சன்ஸ்தா வலதுசாரி அமைப்பின் ஒரு பிரிவான இந்து ஜனாஜகிருட்டி சமிதியைச் சேர்ந்த விரேந்திர டவாதே என்பவரை 2016ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் தேதி கைது செய்தது. பின்னர் அதே ஆண்டு முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், இந்து ஜனாஜகிருட்டி சமிதி மற்றும் தபோல்கரால் நிறுவப்பட்ட மகாராஷ்டிரா ஆந்தாஸ்ரத்தா நிர்மூலன் சமிதி இடையேயான சித்தாந்த வேறுபாட்டால் தபோல்கர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தபோல்கரைச் சுட்டுக் கொன்றதாக சச்சின் ஆண்டூர் என்பவரையும், சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சிலருக்கு ஆதரவாக வாதாடி வந்த வழக்குரைஞர் சஞ்சீவ் புனலேகர் என்பவரை நேற்று மதியம் கைது செய்தனர். இந்த வழக்கறிஞர்தான் சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற பெண் சாமியார் பிரக்யா தாகூருக்கு, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆஜரானவர். இவரோடு சேர்த்து விக்ரம் வைபவ் என்பவரையும் சிபிஐ கைது செய்துள்ளது.
இவரகளை கைது செய்தது குறித்து பேசிய சி பி ஐ அதிகாரிகள் தபோல்கரை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவர், சஞ்சீவ் புனலேகருக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, புனலேகரும், விக்ரம் பாவேவும் கைது செய்யப்பட்டனர்என்று தெரிவித்தனர்.
தபோல்கர் கொல்லப்பட்ட பாணியில்தான் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேசும், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தபோல்கரும் கவுரி லங்கேஷும் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக 2018ஆம் ஆண்டு, சிபிஐ புனே சிறப்பு நீதிமன்றத்தில் கூறியிருந்தது.