ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு – ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
சென்னை,
தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்ட இடங்களில் தேனி தொகுதி தவிர அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேனித் தொகுதியில் மட்டும் அதிமுக வேட்பாளரும் ஓபிஎஸ்-ன் மகனுமான ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் 65717 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களில் தோல்வி அடைந்த ஒரே வேட்பாளர் இவர்தான்.
இந்த நிலையில் இவர் ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொட்ரப்ப்போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து இன்று சத்திய மூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் “தேனி தொகுதியில் தேர்தலின் போது முறைகேடுகள் நடைபெற்றன. அதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. பணபலத்தால் உருவாக்கப்பட்டதே எனது தோல்வி. தன் மகன் ரவீந்திரநாத் வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் வாரணாசி சென்று ஓபிஎஸ் மோடியைச் சந்தித்தார்.
தேனியில் வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுத்தது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரபோவதாகவும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை மீண்டும் எண்ண வேண்டும் என்றும் ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்?.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி
காங்கிரஸ் தோல்வி குறித்து தொடர்ந்து பேசியவர் தமிழகத்தில் அமைந்தது போன்ற கூட்டணி பல மாநிலங்களில் அமையவில்லை என்பதால்தான். ராகுல் காந்தியை ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். மற்ற மாநிலங்களில் அப்படி அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் ஒன்றிணையவில்லை. இதுவே காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் என்று கூறினார். தமிழகம், கேரளா மாநில மக்களைப் போல வட இந்திய மக்கள் விவரம் உள்ளவர்களாக இல்லை என்று குறை கூறியவர் மோடியின் பிரச்சாரத்தில் அவர் மயங்கிப் போய் உள்ளனர் என்றும் . விரைவில அவர்கள் தெளிவு பெறுவார்கள் என்றும் கூறினார்.
தேனித் தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அதிமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று அதிமுகவினர் கேட்டதாக செய்திகள் பரவியது. அதிமுகவினர் தன்னிடம் கொடுத்த ரூ.1000 பணத்தை திருப்பி தருமாறு கேட்டதாக பாக்கியம் என்ற பெண் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது குறிப்பிட தக்கது.