தனியே தன்னந்தனியே!’- ரிசல்ட்டைப் பார்த்து சோகத்துடன் வெளியேறிய மனோஜ் பாண்டியன்
நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக வழக்கறிஞர் பால் மனோஜ்பாண்டியன், தி.மு.க சார்பாக தொழிலதிபர் ஞானதிரவியம், அ.ம.மு.க சார்பாக திரைப்படத் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பாக சத்யா, மக்கள் நீதி மய்யம் சார்பாக வெண்ணிமலை ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியம் முன்னிலையில் இருந்தார். முதல் சுற்றிலிருந்து ஒவ்வொரு சுற்றிலும் சராசரியாக 5000 வாக்குகள் முன்னிலை பெற்ற நிலையில், 5-வது சுற்றுக்குப் பின்னர் வாக்கு வித்தியாசம் அதிகரிக்கத் தொடங்கியது.
நெல்லை தொகுதியில் 8-வது சுற்றின் முடிவில் தி.மு.க வேட்பாளர் ஞானதிரவியம் 56,575 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். 9-வது சுற்றில் வாக்கு வித்தியாசம் 80,912 என இருந்தது. 10-வது சுற்றின்போது தி,மு,க வேட்பாளர் ஞானதிரவியம் 2,41,998 வாக்குகளும் அ.தி,மு.க-வின் பால் மனோஜ்பாண்டியன் 1,52,828 வாக்குகளும் பெற்றனர்.
10-வது சுற்றின் முடிவில் பால் மனோஜ்பாண்டியன் 89,170 வாக்குகள் பின்தங்கிய நிலையில் இருந்தார். தொடர்ந்து தனக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதை அறிந்ததும் வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளிருந்து வெளியே வந்த அவர், வெளியே இருந்த ஆதரவாளர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், வாக்கு எண்ணும் மையத்தை விட்டு தன்னந்தனியாக வெளியே சென்றார். அதைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள் சோகமடைந்தனர்.