சென்னை,
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி முதல் கடந்த 19-ந் தேதி வரையிலும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் வேலூர் நீங்கலாக 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் கடந்த மாதம் 18-ந் தேதி ஒரே நேரத்தில் நடந்தது.
இதேபோல காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின்போது பிரச்சினைகளுக்கு உள்ளான 13 வாக்குச்சாவடிகளுக்கும் மறுவாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடந்தது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் ‘விவிபாட்’ எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணிக்கை தொடங்கியது.
சென்னையை பொறுத்தமட்டில் வட சென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதுதவிர பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தது அங்கு இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியிலும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியிலும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு இருந்தன. 3 வாக்கு எண்ணும் மையங்களும் மத்திய தொழில்பாதுகாப்பு படை மற்றும் கமாண்டோ படையினரின் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது. இங்கும் இன்று காலை வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது.
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 45 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கும் எண்ணும் பணி தொடங்கியது.