சென்னை,
நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை காட்டிலும் 22 சட்டசபை தொகுதிகளின் முடிவை தமிழகம் உற்று நோக்கி வருகிறது. இந்த தேர்தலின் முடிவு தான் அ.தி.மு.க. ஆட்சியின் ஆயுளை நிர்ணயிக்க உள்ளது. ஆட்சி நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்விக்கும் விடையளிக்க இருக்கிறது. மதியம் முன்னிலை நிலவரங்களின்படி, திமுக 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டசபையின் தற்போதைய எண்ணிக்கை 212. இதில் அ.தி.மு.க.-111 (சபாநாயகர் சேர்த்து), அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களாக (இரட்டை இலை சின்னத்தில் போட்டி) தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகிய 3 பேர் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 114 ஆக இருக்கிறது.
ஆனால் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேரில் தனியரசு தவிர மற்ற 2 பேரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் இருப்பதாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 பேரும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக இருப்பதாலும் அவர்களை கழித்து பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 109 ஆக உள்ளது.
போதுமான அளவு மெஜாரிட்டி இல்லாமல் அ.தி.மு.க. அரசு நடந்து வரும் நிலையில், அ.தி.மு.க. மெஜாரிட்டி பெற அதிகபட்சமாக 9 இடங்கள் தேவைப்படுகிறது. 22 இடங்களில் 9 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மிக எளிதாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும்.