புவனேஸ்வர்
இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையாளராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஒடிசாவைச் சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த், சில ஆண்டுகளுக்கு முன்பு பாலின பிரச்சினையில் சிக்கினார். அதாவது அவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக கூறி தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு விளையாட்டுக்கான கோர்ட்டில் அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார்.
இந்த நிலையில் அவர், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்ற தகவலை வெளியிட்டு உள்ளார்.. ‘ஒரே பாலினத்தை விரும்புகிறவர்கள்’ என்று ஒரு சில விளையாட்டு பிரபலங்களே தைரியமாக வெளிஉலகுக்கு சொல்லி இருக்கிறார்கள். அந்த பட்டியலில் டுட்டீ சந்தும் இணைந்துள்ளார்.
தனது பார்ட்னரின் ஒப்புதலுடன் இந்த விஷயத்தை வெளிப்படுத்திய டுட்டீ சந்த் அவரது பெயரை வெளியிட மறுத்து விட்டார்.
இந்த நிலையில் புவனேஸ்வரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது சொந்த சகோதரி என்னை மிரட்டுகிறார். என்னிடம் ரூ.25 லட்சம் கேட்டார். ஒரு முறை அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளேன். என்னை மிரட்டியது முதல், என் உறவு குறித்து வெளியே கூற நிர்ப்பந்திக்கப்பட்டேன் என கூறினார்.