Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

திண்டிவனம் காவேரிப்பாக்கதில் பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்

Posted on May 20, 2019May 20, 2019 By admin No Comments on திண்டிவனம் காவேரிப்பாக்கதில் பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம்

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ராஜி(வயது 60). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி கலைச்செல்வி(52). இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன்(30), கவுதம்(27). கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர்.

கோவர்த்தனன், திண்டிவனம் நகர அ.தி.மு.க. மாணவர் அணி தலைவராகவும், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இதனிடையே கோவர்த்தனனுக்கும், செஞ்சி பகுதியை சேர்ந்த தீபகாயத்திரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி அதிகாலையில் கலைச்செல்வியும், கவுதமும் ஒரு அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். ராஜி, வீட்டின் வராண்டாவில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது. இது தொடர்பாக கோவர்த்தனனிடம் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், தானும், தனது மனைவியும் வேறொரு அறையில் படுத்து தூங்கியதாகவும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சி. எந்திரம் வாங்கி இருந்ததாகவும், இதுவரை அதை சர்வீஸ் செய்யவில்லை எனவும், இதனால் மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று கூறி இருந்தார்.

மேலும் இது தொடர்பாக கோவர்த்தனன் கொடுத்த புகாரின் பேரில் தீ விபத்தில் 3 பேர் பலியானதாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆனால் சம்பவம் நடந்த அறையில் கிடந்த உடைந்த பாட்டில்களின் துகள்கள், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மேலும் கலைச்செல்வியின் தம்பியான கேணிப்பட்டை சேர்ந்த ஜெயங்சகர்(43) என்பவர் போலீசிடம், கடந்த சில நாட்களாக சொத்து பிரச்சினை சம்பந்தமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், 3 பேரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், இது தொடர்பாக ராஜியின் மூத்த மகனான கோவர்த்தனன் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாகவும் கூறியிருந்தார். இவரது தகவல் போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி மேற்பார்வையில் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், மோகன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜியின் உடலில் கத்தி வெட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து 3 பேரும் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து கோவர்த்தனனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கோவர்த்தனன் 3 பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதற்கு அவரது மனைவி தீபகாயத்திரியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து தீ விபத்து வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து கோவர்த்தனன், தீபகாயத்திரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 15-ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்த அறையில் 3 பெட்ரோல் குண்டுகளை கோவர்த்தனன் வீசியுள்ளார். அந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததால் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் கலைச்செல்வியும், கவுதமும் உடல் கருகி அந்த அறையிலேயே பலியானார்கள். ராஜி மட்டும் பின்பக்க கதவு வழியாக வெளியே வந்து கதறியுள்ளார். அவரை, கோவர்த்தனன் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் 5.30 மணிக்கு ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் பெற்றோர் மற்றும் தம்பி இறந்து விட்டதாகவும் கோவர்த்தனன் மற்றும் தீபகாயத்திரி நாடகமாடியதும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து வீட்டில் கிடந்த உடைந்த பாட்டில் துண்டுகளையும், கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று மாலை பாராட்டினார்.

Health News

Post navigation

Previous Post: சென்னை ஐகோர்ட்டில் உதவியாளர் வேலை
Next Post: இம்சை அரசன்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து சிம்புதேவன்??

Related Posts

FICCI TANCARE 2022 – ‘Health Sector Conference & Healthcare Excellence Awards’ FICCI TANCARE 2022 – ‘Health Sector Conference & Healthcare Excellence Awards’ Health News
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 145 இடங்களில் முன்னிலை Health News
Suguna Foods' Delfrez, Participates in the 14th Edition of Foodpro 2022 Organized by the Confederation of Indian Industry Suguna Foods’ Delfrez, Participates in the 14th Edition of Foodpro 2022 Organized by the Confederation of Indian Industry Health News
Apollo Cancer Centre in collaboration with Datar Cancer Genetics launches Revolutionary Blood Test for early detection of Breast Cancer Apollo Cancer Centre in collaboration with Datar Cancer Genetics launches Revolutionary Blood Test for early detection of Breast Cancer Health News
கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா டெல்லியில் விருந்து Health News
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிவித்துள்ளார் Health News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme