Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

மான்ஸ்டர் – சினிமா விமர்சனம்

Posted on May 19, 2019May 19, 2019 By admin No Comments on மான்ஸ்டர் – சினிமா விமர்சனம்

மான்ஸ்டர் – சினிமா விமர்சனம்


மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி ஷங்கரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கருணாகரன், அணில்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், படத் தொகுப்பு – V.J. சாபு ஜோசப், இணை எழுத்தாளர் – சங்கர் தாஸ், கலை இயக்கம் – ஷங்கர் சிவா, கதை, திரைக்கதை – நெல்சன் வெங்கடேசன், வசனம் – சங்கர் தாஸ், சண்டை இயக்கம் – சுதீஷ், நடன இயக்கம் – சந்தோஷ், பாடல்கள் – கார்த்திக் நேதா, யுகபாரதி, சங்கர் தாஸ், ஜஸ்டின் பிரபாகரன், தயாரிப்பு நிர்வாகம் – டி.நிர்மல் கண்ணன், மக்கள் தொடர்பு – ஜான்ஸன், இயக்கம் – நெல்சன் வெங்கடேசன்.

‘ஒரு நாள் கூத்து’ என்னும் இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கையைப் பாடமாக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தனது இரண்டாவது படமான இந்த ‘மான்ஸ்டரில்’ மிக, மிக வித்தியாசமான ஒரு கருவைக் கையாண்டிருக்கிறார்.

சின்ன வயதிலேயே வடலூர் வள்ளலார் மடத்தில் படித்து வளர்ந்தவர் நாயகன் ‘அஞ்சனம் அழகிய பிள்ளை’ என்னும் எஸ்.ஜே.சூர்யா. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற ராமலிங்க அடிகளார் என்னும் வள்ளலாரின் திருச்சபையில் படித்தவர் என்பதால் இவ்வுலகத்தில் எல்லா உயிர்களும் சமமே… எந்த உயிருக்கும் தீங்கிழைக்காமல் வாழ வேண்டும். பிற உயிர்களையும் தன் உயிர்போல மதிக்க வேண்டும் என்பதையெல்லாம் அழுத்தமாய் தன் மனதுக்குள் பதிந்து வைத்திருப்பவர் சூர்யா.

இப்போது சென்னையில் அடையாறு பகுதி மின்சார வாரிய அலுவலகத்தில் துணை பொறியாளராகப் பணியாற்றுகிறார். கொஞ்சம் வயதாகிவிட்டது என்பதாலும், சொந்த வீடு இல்லாதவர் என்பதாலும் இவருக்கு யாருமே பெண் கொடுக்கவில்லை. இதனால் திருமணமாகவில்லையே என்கிற வருத்தத்திலும் இருக்கிறார் சூர்யா.

இந்த நேரத்தில் தஞ்சாவூரில் ‘மேகலா’ என்னும் பிரியா பவானி சங்கரை பெண் பார்க்கச் செல்கிறார் சூர்யா. ஆனால் பிரியா அன்றைய நாளில் நேரத்திற்கு வீட்டுக்கு வராததால் பெண்ணை பார்க்காமலேயே சென்னை திரும்புகிறார் சூர்யா.

தனக்குச் சொந்த வீடு இல்லாததால்தானே பெண் தர மறுக்கிறார்கள் என்று நினைத்து கோபப்படும் சூர்யா, வேளச்சேரி பகுதியில் ஒரு அபார்ட்மெண்ட்டில் ஒரு வீட்டை தவணை முறையில் விலைக்கு வாங்குகிறார்.

அந்த வீட்டில் ஏற்கெனவே வில்லன் அணில்குமார் இருந்திருக்கிறார். அவர் ஒரு பிரபலமான வைரக் கடத்தல்காரர். அந்த வீட்டிலேயே ஒரு சிறிய ரொட்டிக்குள் வைரங்களை பதுக்கி வைத்து அந்த ரொட்டியையும் வீட்டுச் சுவற்றில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸிற்குள் திணித்து வைக்கிறார். திடீரென்று வந்த போலீஸ் ரெய்டில் இவர் மாட்டிக் கொண்டு ஜெயிலுக்குப் போகிறார்.

 

 

இந்த நேரத்தில் அந்த வீட்டை விலைக்கு வாங்கி குடி வருகிறார் சூர்யா. ஆரம்பத்தில் எல்லாமே சுகமாவே இருக்கிறது சூர்யாவுக்கு. இடையில் மேகலாவும் அவருக்குப் போன் செய்து பேசி தான் சென்னையில் வேலை பார்ப்பதாகச் சொல்ல இருவரும் சந்திக்கிறார்கள். காதலிக்கத் துவங்குகிறார்கள்.

இந்த நேரத்தில் வீட்டுக்குள் ஒரு எலி வருகிறது. வீட்டையே துவம்சம் செய்கிறது. பார்க்கின்ற இடங்களில் எல்லாம் எலியின் அட்டகாசம் தொடர்கிறது. வயர்களைக் கடித்து வைக்கிறது. பாத்திரங்களை உருட்டுகிறது. ரஸ்க் ரொட்டிகளை திருடித் தின்கிறது.

ஒரு நாள் எலி கடித்த ரஸ்க்கை சூர்யாவும் சாப்பிட்டுவிட அது அலர்ஜியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் சூர்யா. எலி பொந்து வைத்தும் எலியைப் பிடிக்க முடியாமல் தவிக்கிறார் சூர்யா.

இந்த நேரத்தில் சூர்யாவுக்கும், பிரியா பவானிக்கும் திருமணமும் நிச்சயமாகிறது. பிரியா பவானி தனக்குப் பிடித்தமான சிவப்பு நிற சோபா செட்டை வாங்கி வீட்டில் வைக்கச் சொல்கிறார். சூர்யாவும் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அதனை வாங்கி வீட்டில் வைக்கிறார். ஆனால், மிஸ்டர் எலியார் ஒரு நாள் அதனையும் கடித்து வைத்து சூர்யாவின் பி.பி.யை எகிற வைக்கிறார்.

இந்த நேரத்தில் வில்லன் அணில்குமாரும் சிறையில் இருந்து வெளியில் வந்து அந்த வீட்டில் இருக்கும் வைரங்களை கைப்பற்ற நினைக்கிறார். இன்னொரு பக்கம் தனது கல்யாணக் கனவையே சிதைக்கப் பார்க்கும் அந்த எலியை தனது ஜீவகாருண்ய கொள்கையை புறந்தள்ளிவிட்டு கொலை செய்ய கொலை வெறியோடு தேடுகிறார் சூர்யா.

இறுதியில் நடந்தது என்ன என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

சாந்த சொரூபி.. அடக்கத்தின் மறு உருவம்.. அமைதியின் வாரிசு.. பக்திப் பழம்.. முதிர் கண்ணன்.. சாத்வீக குணம்.. ஆன்மீகச் செம்மல்.. என்று அத்தனைக்கும் ஒரே உருவமாய் திகழ்ந்திருக்கிறார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா.

திருவட்ருபா பாடி தனது பக்தியைக் காட்டுவதில் இருந்து அனைத்து விஷயங்களையும் மென்மையாக அணுகியே பழகும் இவரது கேரக்டர் ஸ்கெட்ச் மிக, மிக சுவாரஸ்யமானது.

போகப் போக அந்த எலியினால் அமோகமாகப் பாதிக்கப்பட்டு.. அதனால் தலைவலியோடு திருகு வலியும் வந்து.. கடைசியில் தனது காதலும், கல்யாணமும் பாதிக்கப்படும் சூழல் வந்த பின்பு கொலை வெறியோடு எலியைத் தேடியலையும் அந்த முதிர் கண்ணனின் நடிப்பு அபாரம் என்றே சொல்ல வேண்டும்.

“எந்தப் பக்கம் பந்து போட்டாலும் அடிக்கிறான்டா” என்கிற பீலிங்கில் என்ன செய்தாலும் எலியை ஒழிக்க முடியவில்லையே என்று அவர் புலம்புவதிலும், சோபா எரிந்த பின்பு அவர் காட்டும் கோப வெறியிலும் “பாவம்பா” என்ற ரசிகர்களின் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் வாங்கிக் கொண்டுவிட்டார்.

மேகலாவுடனான காதலில் பக்குவமாய் இருந்து, எல்லைக் கோட்டைத் தாண்டாமல் மென்மையான காதலனாக இருக்கும் சூர்யாவின் நடிப்பு அபாரம். சிறந்த இயக்கமும் இதற்கு உறுதுணையாய் இருந்திருக்கிறது.

அழகி பிரியா பவானி ஷங்கர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பதால் இது நிச்சயமாக அவருக்கு முக்கியமான படம்தான். ஏதோ இதுதான் இவரது முதல் படம் என்பதுபோல் இவரது அறிமுகக் காட்சியை இத்தனை விஸ்தாரமாக பிரியாவின் முக அழகுடன் காட்டி அசத்தியிருக்கிறார் இயக்குநர்.

இந்தக் கூட்டணியில் மூன்றாவதாக கருணாகரனும் சேர்ந்து கொண்டு லூட்டியடித்திருக்கிறார். இவர் பேசும் ஒற்றை வரி கமெண்ட்டுகளே குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன. சிற்சில இடங்களில் திரைக்கதையும் காமெடியாகவே அமைந்திருப்பதால் இந்த மூவர் கூட்டணி காட்சிகளை பெரிதும் ரசிக்க முடிந்திருக்கிறது.

வில்லன் அணில்குமார் கோஷ்டி எலியைப் பிடிக்க வரும் விஞ்ஞானிகளாக வீட்டுக்குள் வந்து எலியைப் பிடிக்க செய்யும் ஐடியாக்களும், எலி இவர்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிகளும் மிக, மிக சுவாரஸ்யம்.

கடைசியாக எலியும் ஒரு உயிர்தான். அதற்கும் குடும்பங்கள் உண்டு. அவற்றுக்கும் இவ்வுலகில் வாழ உரிமையுண்டு என்பதை அழுத்தமாய் சொல்லும்விதத்தில் கிளைமாக்ஸ் காட்சியை வடிவமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

உண்மையாகவே இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமே பின்னணி இசைதான். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மற்ற படங்களைபோல ஷாட் பை ஷாட் காதுகளை அலற விடவில்லை. தேவையான இடத்தில் மட்டுமே பின்னணி இசையை நிரப்பியிருக்கிறார். இதுவே போதுமானது. சிற்சில இடங்களில் வெறும் வசனத்தை மட்டுமே அனுமதித்திருக்கிறார். இதுவே இந்தப் படத்தை ரசிக்க முடிந்ததற்கான காரணமாகவும் இருக்கிறது. ‘அந்தி மழை’ பாடலின் வரிகளும், காட்சிப்படுத்தலும் ரசிக்க வைத்திருக்கிறது.

இதேபோல் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயின் பணியும் சிறப்பானது. எலி சம்பந்தப்பட்ட காட்சிகளை கிராபிக்ஸில் செய்திருப்பதால் மிகுந்த மெனக்கெடலுடன் திட்டமிட்டு அதனைக் காட்சிப்படுத்தி படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் கச்சிதமாக அதனைத் தொகுத்து வழங்கியிருப்பதால்தான் படத்தின் இடைவேளைக்கு பின்னான காட்சிகளை அத்தனை ஆர்வத்தோடு ரசிக்க முடிந்திருக்கிறது. படத் தொகுப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இதற்கு முன்பு எலியை மையப்படுத்தி வந்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் எலியைத் துரத்தும் திரைக்கதையை காமெடியாக்கியதால், இப்போதுவரையிலும் காமெடி படங்களில் சிறப்பான இடத்தில் இருக்கிறது அத்திரைப்படம்.

இதேபோல் இத்திரைப்படத்திலும் காட்சிகள் தொடர்புண்டு இருந்தாலும் எலியைப் பிடிக்க போடும் திட்டமும், எலியின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையும் வேறாக இருந்து படத்திற்கு வித்தியாசத்தைக் கூட்டியிருக்கிறது.

இந்தக் கோடைக் கொண்டாடட்டக் காலத்தில் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் சென்று மகிழ வைக்க ஏதுவாக இந்த ‘மான்ஸ்டர்’ திரைப்படம் வந்துள்ளது.

Cinema News

Post navigation

Previous Post: சினிமா பிரபலங்கள் நேரில் வாய்திய டாக்டர்.எஸ்.எம்.பாலாஜியின் மகள் திருமண வரவேற்பு
Next Post: அரவக்குறிச்சியில் அதிக வாக்குப்பதிவு.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Related Posts

Black Panther Movie Reaches the Rs. 50 Crore Mark Opening Weekend in India! Black Panther Movie Reaches the Rs. 50 Crore Mark Opening Weekend in India! Cinema News
அபிஷேக் அகர்வாலின் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம், 69 வது தேசிய திரைப்பட விருதுகள் 2023 இல், தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை வென்றுள்ளது Cinema News
நம்பி விளைவின் வெற்றி தொடர்கிறது! நம்பி விளைவின் வெற்றி தொடர்கிறது! Cinema News
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் சீமான் அளித்த பேட்டி Cinema News
சந்தானத்தின் அதகள காமெடியில் ZEE5 இல் சிரிக்க வைக்க வரும்   ‘டி.டி.ரிட்டர்ன்ஸ்’ Cinema News
பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்! பிரபுதேவாவின் ‘பகீரா’ படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.வி. பரதன்! Cinema News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2023 IndiaStarsNow.Com.

Powered by PressBook Grid Blogs theme