ஒரே ஊசியால் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி.யை பரப்பிய டாக்டர்.. பாகிஸ்தானில் பயங்கரம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே ஊசியை எல்லோருக்கும் பயன்படுத்தி சுமார் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி தாக்குதலை ஏற்படுத்திய மருத்துவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் மாநிலம் சிந்தி மாகாணத்தில் உள்ளது வஸாயே என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அடிக்கடி உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் சந்தேகத்தின் பேரில் அப்பகுதி மக்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அக்கிராமத்தைச் சேர்ந்த 530 பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பதாக அதிர்ச்சித் தகவல் தெரிய வந்தது. பாதிக்கப்பட்டோரில் சுமார் நானூறு பேர் குழந்தைகள் ஆவர்.
எப்படி ஒரே ஊரில் இவ்வளவு பேருக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அப்பகுதியில் மருத்துவமனை வைத்திருக்கும் முசாபர் கங்கர் என்ற மருத்துவர், சுகாதாரம் அற்ற முறையில் அனைவருக்கும் ஒரே ஊசியை பயன்படுத்தியது தெரிய வந்தது.
பணத்தை மிச்சப்படுத்துவதற்காக ஒரே ஊசியை சரிவர தூய்மைப் படுத்தாமல் அனைவருக்கும் அவர் பயன்படுத்தி இருக்கிறார். அதோடு, போலீசாரின் விசாரணையில் முசாபருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உங்கள் ஒவ்வொரு ஓட்டும் இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும்- கேதார்நாத்தில் இருந்தபடியே மோடி உருக்கம்
ஒரே ஒரு மருத்துவரின் அலட்சியத்தால் இன்று ஒரு கிராமத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஹெச்.ஐ.வி தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் ஹெச்.ஐ.வி. வேகமாகப்பரவிவரும் நாடுகளில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. அதோடு அங்கு போலி மருத்துவர்கள் அதிக அளவில் இருப்பதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.